Monday, January 05, 2015

இணைய நூற்றாண்டு

மனித குல வரலாறு முழுக்க புத்தம் புது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே  இருந்திருக்கிறது,  அதன் வாயிலாக படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருந்த மனித சமூகம் கடந்த 400 ஆண்டுகளில் முன்னேறிய வேகத்தில் எந்த காலத்திலும் முன்னகர்ந்தது கிடையாது. அந்த 400 ஆண்டு கால அசுர வளர்ச்சிக்கு காரணம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் /  கடவுள் சொன்னார் என்பதற்காக எதையும் நம்பாது, ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி, தர்கித்து, பகுத்து ஆராய்ந்து பின்னர் ஏற்றுக்கொள்ள முயன்றதால் தான். இந்த 400 ஆண்டு வளர்ச்சியையும் கடந்த 40 ஆண்டுகள் விஞ்சி நிற்கும் நிதர்சனத்திற்கு பெருவகையில் இணையத்தையும் தொலைதொடர்பு சாதனங்களின் எளிமையாக்கத்தையும், இவ்விரண்டின் பரவலாக்கத்தையும் காரணமாக சொல்லலாம். 

இணையம் இந்நூற்றாண்டில் வெகுமக்கள் பயன்பாட்டிற்கு  சமூக வலைதளங்கள் வாயிலாக திறந்து விடப்பட்டது முதலாகவே சிந்தனை தளத்தில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி  வருகிறது. இதில் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கின்றது. எந்த தகவலும் நொடியில் கிடைத்துவிடும் என்பதே வாய்ப்பாகவும், ஆபத்தாகவும் இருக்கிறது. தகவல் களஞ்சியமாகவும் பொழுது போக்கு அம்சமாகவும் இருக்கின்றது இணையம். விட்டில் பூச்சிகள் எந்த விளக்கில் விழுகின்றன என்பதே தற்போதைய பிரதான கேள்வி. 

பல நாடுகளில் அரசையே மாற்றிய இந்த சமூக வலைதள பலம், மக்களின் எண்ணவோட்டத்தை நொடிக்கு நொடி ஒரு சிலர் அல்லது சில குழுவினர் மாற்றி அமைக்க முடியும் என்பது ஆழ்ந்த கவனம்  கொள்ள வேண்டியது. ஒவ்வொரு நாடும் தன் இணைய கட்டமைப்பை பலப்படுத்த கவனம் செலுத்துகின்றது.. பொருளாதாரா மேம்பாட்டிற்கு பெரிதும் பயன் தரும் என்று இன்று இவை கட்டமைக்கும் இந்த கட்டமைப்பு நாளை அரசியல் நிலையற்றதண்மைக்கான ஊற்றாக மாறப்போவதும், ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாய் உருவாகப் போவதும் உண்டு. கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் எப்படி தன்னை அழிக்கும் பாட்டாளி வர்க்கத்தை அதுவே வளர்த்தெடுப்பதாக சொன்னாரோ அதே போல் "எந்த அரசும் தனக்கான அழிவை தானே உண்டாக்கும்" என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகலாம்.

இணைய சக்தியை கையாள்வதின் மூலம் மக்களை திசை திருப்பி அவர்களை  நொடிப்பொழுதில் கட்சி மாற வைக்கும் வழி தெரிந்தவர்கள் ஆட்சியில் அமர முடியம் என்றால் அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கவும் அதே இணையம் கருவியாகும் என்பதையும் மறுக்க முடியாது தானே. 

துறை சார் வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், என   பொது மக்களிடம் இருந்து எப்போதுமே தொலைவில் இருந்தவர்களை, அவர்களுக்கு மிக சமீபத்தில் நிறுத்தியிருக்கிறது இணையம். உச்சாணிக் கொம்பில் இருந்தவர்களின் பிம்பங்கள் அப்பட்டமாக பொது வெளியில் உடைபட்டு அவரவர் உண்மை முகத்தை பார்த்துணரும் சாதாரணன் தன்னை கட்டமைத்து வைத்திருந்த பல விதிகளை தானே உடைத்து வெளிவருவதையும், மூர்க்கமாக செயல்படுவதையும் தன் சுதந்திரமாக நிறுவ முயல்கிறான். மெய்யுலகில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை, பழகிவந்த நாகரிகங்களை, முகம் பார்த்து நேருக்கு நேராக பேச முடியாத வார்த்தைகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக மெய்நிகர் உலகில் செய்ய முடிவதை கட்டற்ற சுதந்திரம் என்று நம்புகிறான்.

தனி மனித அளவில் இணையம் அவர்களை பல்வேறு சேதிகளை தெரிந்து கொள்ள உதிவிய போதிலும், பெரும்பான்மை மக்களிடையே தரவுகளை தேடும் பழக்கமே இல்லாமல் முதலில் வாசிப்பதே உண்மை என நம்பும் மனநிலையை வளர்த்தெடுக்கிறது. இதன் மூலம் வலிமையான எழுத்து இருந்தால் சாத்தான்கள் கடவுளாவது எளிது,  தனி மனிதர்களின் ஆழ் மன இயல்புகளான பயம், தயக்கம், வக்கிரம் என பொது வெளியில் முன்னிறுத்த முடியாத உணர்வுகள் சமூக வலைதளங்களின் வாயிலாக, அது வழங்கும் முகமூடி வாயிலாக பரவலாக வெளிப்படுகிறது. இயல்பிலேயே அமைதியாக இருப்பவர்கள் கலகக்காரர்களாய் அடையாளம் கொள்ளப்படுவதும், கோமாளிகள் போராளிகளாய் புரிந்து கொள்ளப்படுவதும் நிகழ்வது இதனால் தான். 

இணையம், தன்னை எப்படிக் கையாள்வது என்பதற்கான பயிற்சியும்,  முதிர்ச்சியும் மக்கள் அடைவதற்கு முன்னமே பாகாசுரமாக வளர்ந்து நிற்கிறது. நேரத்தை, ஆழ்ந்த வாசிப்பை, புரிதலை, தர்க்கத்தை, பகுத்தறிவை, பிறரை மதிக்கும் பொதுவெளி நாகரிகத்தை கேள்விக்குள்ளாக்கி, வசை பாடுவதையும், குழு மனப்பான்மையையும், சுய பரிசோதனையற்ற தன்மையையும், முன் முடிவுகளை நம்பி செயல்படும் போக்கையும், அவசர கதியில் வினையாற்றும் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது. படிப்பது  குறைந்து வரும் அதே நேரம், எழுதுவது அதிகரித்து வருகிறது. 

சுயம் என்று தாம் நம்புவதை  நிலைநாட்டிக் கொள்ளவும், தமக்கு சரி என்று எண்ணுவதை  முன்னிறுத்தவும் சமூக வலைதளங்களைப்  பொறுத்த மட்டில் மக்கள்  எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்ல  தயங்குவதே இல்லை. எல்லாவற்றையும் / எல்லோரையும்  குற்றம் சுமத்துவது, கேள்விக்குட்படுத்துவது, விடை காணும் முன்பே விலகிவிடுவது,  மேலோட்டமாய் எதையும் அணுகுவது, உணர்ச்சியின் வயப்பட்டு முடிவுக்கு வருவது, தமது கருத்துக்கு எதிர்வாதம் செய்பவர்களை வாதத்திற்கு பதில் அளிக்க முயலாமல் அவர்களின் தனி மனித வாழ்வை நோக்கி விரல் நீட்டுவது என மெய்நிகர் போர்களமாய் மாறிவிட்ட இணையம் தான் அடுத்த தலைமுறையின் ஒரே வழிகாட்டியாய் இருக்கப்போகிறது என்பதை சமூகவியலாளர்கள் கவனத்தோடு அணுக வேண்டியது அவசியம். 

இணைய நூற்றாண்டு  நாம் யாரும் எண்ணியே இருந்திராத காட்சிகளை  நம் முன் அவிழ்க்கப் போகிறது. உண்மையான புது யுகம் அப்போது தான்  பிறக்கும், அந்த யுகத்தில் உடைப்பதெற்க்கென்று எந்த விதியும் இருக்காது.