Saturday, May 11, 2013

அப்பா என்றால் .....

அப்பா என்பதற்கு என்ன அர்த்தம் என்று எப்போதாவது அகராதியில் தேடிப்பார்த்திருக்கிறோமா? பார்த்தாலும் கூட என்ன இருந்துவிடப் போகிறது? ஆனால் எந்த அகராதியிலும் இல்லாத ஒன்றுண்டு. அது,

அப்பா - அதிகம் புரிந்து கொள்ளப்படாத உறவு

உண்மைதானே.

"ஏப்ரல் மாதத்தில்" திரைப்படத்தில் ஒரு வசனம், "எனக்கு எங்க அப்பா தான் ஹீரோ... எனக்கு மட்டுமில்ல, எல்லா பசங்களுக்குமே" என. ஆனால் அதே அப்பா பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைக்கு (அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விதிவிலக்குகள்  தவிர்த்து) நிச்சியம் "Anti -Hero" வாகத்தான் இருந்திருப்பார்.


அப்பாவை திட்டியிராமல் கடந்து விட்ட பதின் பருவமென்பது நிச்சியம் யாருக்குமே இருக்காது. 

இவர் எப்போது தான் நம்மை புரிந்து கொள்வார் ?

அப்படி என்ன கேட்டு விட்டோம், இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாது என்றால் ஏன் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும்? 

இனி இவர் முகத்திலே விழிக்கவே கூடாது. 

அப்பாவிடம் போட்ட சண்டைகளுக்காக அம்மாவை துன்பப்படுத்தி சாப்பிடாமல் படுக்க போன இரவுகள்

என பதின் பருவத்தில் அப்பாவின் மீது கோபமில்லாமல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கவே முடியாது. 

அப்பாவின் உலகத்திற்கும் அம்மாவின் உலகத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அம்மாவின் உலகம் மாற்றமே இல்லாதது. பிள்ளை எவ்வளவு வளர்ந்தாலும் சரி, பிறந்த பிள்ளையிடம் எம்மாதிரியான பாசம் காண்பித்தாளோ அதில் துளியும் வேறுபாடில்லாமல் தான் அம்மா இருப்பாள். ஆனால் தந்தைக்கு அந்த சுதந்திரம் இருக்காது, என்ன செய்ய? அவர்களின்  உலகம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

எத்தனை பெரிய துன்பத்திலும் பிள்ளைகளுக்கு முன் அழுதுவிடக்கூடாது என்பதில் தொடங்கி எவ்வளவு பாசமிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதில் ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொள்வது என நீளும். அப்பாவின் பாசம் என்பது பிள்ளை வளர வளர பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். . 

விவரம் தெரியத் தொடங்கிய பிறகு தூக்கத்தில் எழுப்பி அம்மா சோறூட்டிய நிகழ்வுகள் எல்லோருக்கும் இருக்கும். அப்பா சோறூட்டிய நிகழ்வுகள் ஒரு சிலருக்கு வரமாக அமைந்தால் தான் உண்டு. விழிப்பு வந்து விட்ட ஒரு பின்னிரவின் அரைத்தூக்கத்தில், தூங்குவதாய் பாசாங்கி கொண்டே மென்ற அப்பா ஊட்டிய ஆம்லேட்டுக்குள் மடித்து வைத்த புரோட்டா இப்போது கூட எனக்கு சொர்க்கமாக இனிக்கிறது. 

"தோளுக்கு மேல வளந்துட்ட, இனி உன்னை அடிச்சா எனக்குத்தான் அசிங்கம்" - இப்படித்தான் எனது சுயத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். You are on your own என்பதன் அர்த்தமது.


செலவழிக்க காசு கொடுக்கிறவர், கொடுத்த காசை எப்படி செலவழிச்ச என கணக்கெழுத சொல்றவர், காசே கொடுக்காதவர், உனக்கெதுக்கு காசு என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கியாறேன் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமா அப்பா இருப்பார்.

நண்பனொருவன் சிகிரெட் குடிக்கிற செலவை கூட கணக்கு நோட்டுல எழுதுவான். 'ஏண்டா இதைக்கூட எழுதணுமா? செலவுன்னு எழுதினா போதாதா?'ன்னு கேட்டா, 'சிகிரெட் குடிக்கிறது, கணக்கெழுதுறது இரண்டுமே அப்பாவை பாத்து கத்து கிட்டது'ன்னு சொன்னான். அப்பா சிகிரெட் குடிக்கிறத பார்த்து வருத்தப்படாத பெண் பிள்ளைகளும், ஆசைப்படாத ஆண் பிள்ளைகளும் இருக்க முடியாதுதானே.

அப்பா பசங்க உறவில் பதின் பருவம் ஏற்படுத்தும் விரிசலும் புரிதலற்ற தன்மையும் சரியாக, பசங்க அப்பாவகுற வரை காத்திருக்கணும். ஆனா பெண் பிள்ளைகள் தான் பாவம், அதுவும் நம்ம சமூக சூழல் பெண்கள் வயசுக்கு வந்த அடுத்த கணத்துல இருந்து அப்பாவை அவளிடம் இருந்து  உளவியல் ரீதியா நிரந்தரமா பிரித்துவிடுகிறது. பாவம் பெண்கள் ஒரு பால்ய நண்பனை நிரந்தரமாக இழந்துவிடுகிறார்கள். அப்பாக்களோ காமம் கடந்த காதலியை பறிகொடுத்து விடுகிறார்கள்.

அப்பா-பெண்கள் உறவு பற்றி வள்ளுவர் கூட பேசவில்லை- அவர் ஆணாதிக்கவாதிதானோ? 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகனை அவயத்துள் முந்தி இருப்ப செய்தல் தந்தை மகனுக்காற்றும் நன்றியாம். இவங்க அப்பா  என்ன தவம்  செய்தாரோ  அப்படின்னு மகன் அப்பனுக்கு பேர் வாங்கி தருவது "உதவியாம்". வள்ளுவனுக்கு மறை கழண்டு போச்சா என்ன ? நிச்சியமா இல்லை.

அமீபா தொடங்கி திமிங்கிலம் வரை பிறப்பெடுக்கிற ஒவ்வொரு உயிரின் லட்சியமும் என்ன தெரியுமா? தன் சந்ததியை உருவாக்கி விட்டு போவது தான். இந்த ஒற்றை காரியத்துக்காகத்தான் உலகமேஇயங்கி கொண்டிருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. அப்படி இருக்கும் போது தன் சந்ததியை பரப்பும் வாய்ப்பு கொடுக்கும் பிள்ளைக்கு, எல்லாருக்கும் முன் வைத்து பெருமை சேர்த்து தருவது தான் ஒரு தந்தை செய்யும் நன்றிக்கடன். வம்ச விருத்திசெய்வதற்காக பிறக்கும் பிள்ளை, வம்ச விருத்தியோடு தந்தைக்கு பேரும் வாங்கித்தருவது அப்பனுக்கு செய்ற உதவிதானே? Does Really Valluvar Rocks?!

- திடீரென அப்பா புராணம் எழுத என்ன காரணமென்றால் அடுத்ததுத்து படிக்க நேர்ந்த சில சேதிகள். அவை இதோ.


2. 

-ரகு.சி