Thursday, February 09, 2012

சமூக வலைதளங்களில் காமம்-விபச்சாரம் எனும் பழந்தொழில் - ஒரு அலசல்


ஒரு கருத்து மோதல்!என் பதிவுலக நண்பர்களுடன்! எது பற்றி? காமம் பற்றி ! காமத்தை கீச்சர்(Twitter),முகநூல்(Facebook) போன்ற சமூக வெளிகளில்  அப்பட்டமாக எழுதலாமா என ?! அப்படி எழுதுவதால் பெண்கள் குறிப்பாக பதிவுலகில் வாழும் பெண்கள் நேரடியாக ஆண்களால் தரக்குறைவாக பார்க்க/கேட்கப் படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. இதன் விளைவாக எழுந்த கருத்து பரிமாறல்கள் மெல்ல திசை மாறி, விபச்சாரம் பற்றி திரும்பியது.இதில் விபச்சாரம் என்பது ஒழிக்கப்படவேண்டும் என்றும், பெண்ணின் உடலை ஒரு வியாபார பொருளாக பாவிக்கும் அவலம் மாற வேண்டும் எனவும், பெண்ணை சக உயிராக பாவிக்க வேண்டுமே அன்றி காம இச்சைக்கான ஒரு பொருளாக பார்க்க கூடாது என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த கருத்து வரையில் எனக்கும் உடன்பாடுதான்! ஆனால் இன்னும் சில கருத்துக்கள் மொழியப்பட போய்த்தான் இப்படி ஒரு பதிவை நான் எழுதவும் நீங்கள் படிக்கவும் வேண்டியதாகிவிட்டது.

அவையாவை:
1.      "இந்த அவலம் உடனடியாக முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்"
2.     "உடலை விற்பனை பொருளாக பார்க்கும் இந்த கொடுமை மாற வேண்டும்""உலகில் எங்குமே இந்த தொழில் நிகழகூடாது"
3.     "இந்த தொழிலில் இருப்பதால் தான் கற்பழிப்புகள் குறைவாக நிகழ்கின்றன"
4.     "இந்த தொழில் இருப்பதால் தான் மற்ற பெண்கள் எந்த தொல்லையும் இன்றி வாழ முடிகிறது"
முதலில் ஆரம்ப புள்ளியான கேள்வியை சற்று அலசி விட்டு மேற்கொண்டு போகலாம்.
கேள்வி : சமூக வெளிகளில் காமத்தை அப்பட்டமாக எழுதலாமா கூடாதா என்று!
என் புரிதல் : இதை ஒரு குழுவாக நாம் எப்படி தீர்மானிக்க முடியும். இந்த கேள்வியே Democracy எனும் பெரும்பான்மை முடிவுகளோடு ஒத்து போக வேண்டும் என்ற கோட்பாட்டில் வளர்ந்துவிட்ட/அது தான் சரி என்று நம்பி(புரிந்து அல்ல) பழகி விட்ட ஒரு சமூகமாக  நாம் மாறிப்போனதன்  விளைவே! எதையுமே பெரும்பான்மையை வைத்து முடிவு செய்வதும் ஒரு வகையில் சர்வாதிகாரம்தானே! பின்னர் என்ன மக்களதிகாரம் (சனநாயகம்)! வெகுமக்களதிகாரம் என வேண்டுமானால் சொல்லலாம். சிறுபான்மையினர் உணர்வுகள் மதிக்கபடாத/மறுக்கப்படும் போது/கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது என்ன விளைவுகள் எழும் என்பதை சமகால வரலாறுகள் சொல்லும். சரி விடயத்துக்கு வருவோம். இது "பொது'வெளி என்று சொல்லி விட்ட பிறகு மற்றவருக்கு கட்டுபாடுகள் எப்படி விதிக்க முடியும்.பிடித்தால் படிக்கலாம்,பிடிக்காவிட்டால் ஒதுக்கிவிடலாம், அதை விடுத்து "ஒரு அளவு வரை பொருத்து கொள்ளலாம்/எல்லை மீறுவதே தவறு" என அளவீடுகள் செய்வது புரிபடவில்லை. "காமத்தை இப்படி சொல்வது சரி/இந்த எல்லை மீறனால் தவறு" என வரையறுக்க முடியுமா?அப்படி வரையறை செய்தால் அந்த எல்லை ஒருவருக்கொருவர் வேறுபடாதா? என்னளவில் காற்றுக்கு கூட கண்ணாடி வேலி இட்டுவிடலாம் கருத்துக்கு! ம்கூம்! எதுவும் செய்ய முடியாது! சரி இந்த வரையறை எல்லாம் சமூக/கலாச்சார/பழக்கவழக்க பின்புலத்தை அடிப்படையாக வைத்து தானே! இந்த பின்புலங்கள் மிக வேகமாக மாறி வரும் காலச்சூழலில் இது மட்டும் மாறக்கூடாது என எப்படி எதிர் பார்க்க முடியும்! இன்று பெரிதாக கொண்டாடப்படும் மக்களதிகாரம்(சனநாயகம்)/மக்களாட்சி தத்துவம் தனி மனித உரிமைக்கு தானே முதலிடம் தருகிறது, அந்த அடிப்படையிலும் மற்றவர் எப்படி கருத்து சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு தானே! மற்றபடி "அந்தரங்கத்தை ஏன் பதிய வேண்டும்?அதை சொந்த நாட்குறிப்புகளில் பதிய வேண்டியது தானே! இப்படி 'பொது'வெளியில் கொட்டலாமா? பலரும் புழங்கும் இடம் இல்லையா ?" என கேள்விகள் கேட்கலாமா என்றால் ? கேட்கலாம் அது உங்கள் உரிமை! ஆனால் பதிலையோ/ மாற்றத்தையோ எதிர்பார்த்தால் அது மற்றவரின் உரிமையின் மீதான தாக்குதலே! என்னளவில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்ய முடிவது தான் இணையத்தின் சிறப்பு(அதுவே சாபமும் கூட). தெளிந்த புரிதல் உள்ளவர்கள் தங்களுக்கு தேவை எதுவோ அதை சரியாக தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்! இணையத்தில் சரிபாதி  இது போன்ற பாலுணர்வு தூண்டும் பக்கங்களே, மீதி தான் அறிவுசார் பக்கங்கள், இந்த அறிவுசார் பக்கங்களில் இது மாதிரியான பாலுணர்வு தூண்டும் ஆக்கிரமிப்புகள் நமது சமூக/கலாச்சார மாற்றங்களை வெளிக்காட்டுகின்றன, அந்த மாற்றங்களுக்கான காரணிகள் பல இருக்கும் போது, அதை விட்டுவிட்டு  விளைவுகளில் கவனம் செலுத்துபவை  தான் இது போன்ற கேள்விகள்.
இனி பதிவின் நோக்கம் பற்றி!
விபச்சாரம் "உலகின் முதல் தொழில்" என்ற அடைமொழி பெற்ற தொழில், இது ஏதோ பெண்களுக்கான தொழில் என்ற எண்ணமிருந்தால் சற்று வரலாற்றை சான்று பார்க்கவேண்டும். ஆம் கிரேக்கத்திலும், ஏன் உலகின் பல வளர்ச்சியுற்ற நாகரீங்களிலும்(இந்தியா உட்பட) "ஆண்கள்" விலை பொருளாக இருந்துள்ள சான்றுகள் பல உள்ளன(இவை பெரும்பாலும் ஓரினச்சேர்கைகாக).பின்னர் ஏனோ? எப்படியோ? இதில் "பெண்கள்" மட்டும் சிக்கிக்கொள்ள "ஆண்கள்" லாவகமாக வெளியேறிவிட்டர்கள். இன்று உலகில் இந்த தொழில் இல்லாத நாடு என எதுவும் கிடையாது.சில நாடுகள் இதை அங்கீகரித்து,முறைபடுத்தி சட்டதிட்டங்கள் வகுத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.பெரும்பாலான நாடுகளில் கலாச்சார/சமூக/தேச நற்பெயர் போன்ற பல காரணங்களுக்காக இத்தொழில் அங்கீகரிக்கபடாது/தடை செய்யப்பட்டுள்ளது."உடலை விற்பது என்பது இழி செயலா?" என்பதை அந்தந்த இனத்தின் கலாச்சார விழுமியங்கள் சார்ந்தே மதிப்பிட முடியுமே அன்றி பொத்தம்பொதுவாக மதிப்பிட முனைந்தால் அது உணர்ச்சிவயப்பட்ட முடிவாய் இருக்குமே அன்றி அறிவுசார் முடிவாய் இருக்காது.
தமிழ் கலாச்சாரத்தில் இன்று எஞ்சியிருக்கும் அத்தனை இலக்கியங்களிலும் "பரத்தையர்" பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைகின்றன. அந்த குறிப்புக்கள் யாவும் "பரத்தையை" பண ஆசை கொண்ட பெண்ணாக சித்திரிகின்றனவே அன்றி, அவள் எங்ஙனம் பரத்தையானால் என்ற விசாரணையிலோ, அவளின் உள்ளகிடக்கை பற்றிய ஆராய்ச்சியிலோ இறங்கவேயில்லை. ஏற்கனவே வக்குக்கப்பட்ட சமூக நெறிமுறைகளில், கீழான நிலையில் பரத்தையை நிலைநிறுத்துவதில் வெற்றிகண்டிருக்கும் இலக்கியங்கள் அத்தகைய ஒரு "இனம்" எப்படி தோன்றியது என விவரிக்கவில்லை-எனக்கு தெரிந்தவரை,தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதிவிடவும்.(பிற்கால பொட்டுகட்டிவிடும் நடைமுறை பற்றி நாம் இன்னும் பேசவில்லை).
சில வளர்ச்சியடைந்த/இந்த தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் தவிர மற்ற நாடுகளில் பெண்கள் யாருமே இந்த தொழிலுக்கு விரும்பி போவதில்லை(நாடுகள் பற்றிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன).பலவாறாக ஏமாற்றப்பட்டு/கடத்தப்பட்டு இந்த தொழிலில் கட்டாயத்தின் பெயரில் இறங்கி,பின்னர் வேறு வழியின்றி தொடர்ந்து செய்கிறார்கள்.சில சமயம், இதிலுருந்து மீள நினைத்தலும் சமூக அங்கீகாரம் கிடைக்காமல் மீண்டும் இந்த தொழிலுக்கே திரும்பிவிடுபவர்கள் அதிகம். இத்தகைய தொழிலில் இவர்களை ஈடுபடுத்துபவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் உறவினராகவும்/அல்லது அவர்களின் நம்பிக்கையை பெற்றவர்களாகவும்/தொழில்சார் நண்பர்களாகவும்/கடத்தல்காரர்களாகவும் இருக்கிறார்கள்.
(One United Nations estimate says from 113 million to 200 million women around the world are demographically "missing." Every year, from 1.5 million to 3 million women and girls lose their lives as a result of gender-based violence or neglect.)
இதில் ஒரே ஒரு மாற்று என்னவெனில், இந்த தொழில் அங்கீகரிக்கப்பட்டு/முறைபடுத்தப்பட்ட நாடுகளில் இத்தகைய கடத்தப்பட்ட/ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்களை அவ்வளவு எளிதாக ஈடுபடுத்திட முடியாது.அங்கே பலமான கணக்கெடுப்புகளும், தொழில் செய்வோர்/ஈடுபடுவோர் பற்றிய  பூர்வீக ஆராய்ச்சிகளும்,தற்கால நிதி நிலை பற்றியும், அவர்களின் விருப்புநிலை பற்றியும், அவர்களின் உடல்/நோய் பற்றிய தகவல்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, ஆராய்ந்து அதன் பின்னரே இந்த தொழில் செய்ய அனுமதிக்கபடுகிறார்கள். ஆனால் எந்த அங்கீகாரமும் இல்லாத நாடுகளில் இந்த தொழில் மேற்சொன்ன எந்த வரைமுறைகளுக்கும் உட்படாது ஆட்சியாளர்கள்/அதிகாரிகள் போன்றோர் அரவணைப்புடன்  ஒரு நிழல் அரசாங்கமாய் நிகழ்ந்து வருகிறது.
Women trafficking for sex in india :http://nhrc.nic.in/Documents/ReportonTrafficking.pdf
இதன் காரணமாக கடத்தப்படும் பெண்கள்/குழந்தைகள் பற்றிய எண்ணிக்கை வெகு அதிகம். இந்த அவலங்களை ஒரே நாளில் ஒழித்து விடமுடியாது. மற்றும் இத்தனை நாளாக அத்தகைய தொழலில் ஈடுபட்டவர்களை குறுகிய காலத்தில் அதிலிருந்து மீட்டு எடுத்துவிடலாம் என்றாலும் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை வாங்கித்தந்து விடமுடியாது(இந்திய/தமிழக சூழலில்).அமெரிக்காவில் செக்சுகாக பணம் பெறுவது சட்டப்படி குற்றம்-அதாவது உடலை விற்க கூடாது. இது ஒரு எளிய சட்டம்.இதன் மூலம் விபச்சாரம் ஒழிந்து விட்டதா ? என்றால் அமெரிக்க வாழ் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அமெரிக்கா போன்ற ஒவ்வொரு குடிமகனின் தரவுகள் வைத்துள்ள நாடுகளில் இது ஓரளவு நடைமுறை சாத்தியம்,இந்தியாவில் ? போங்க இவ்வளவு சீரியசான கட்டுரை எழுதும் போதும் சிரிப்பு வரவழைக்கும் கேள்வி இது.
உடல் விற்கப்படுவது சரியா?தவறா? என்பது முன்னமே சொன்னது போல் சமூக விழுமியம் சார்ந்த கேள்வி!(சரி உன் பதில் என்ன என்கிறீர்களா? நான் பிறந்து/வளர்ந்த சமூகம் சார்ந்த பட்டறிவின் படி "தவறு")
இந்த தொழிலை உடனடியாக உலகை விட்டு ஒழித்து விட முடியாது, இது மிகப்பெரிய சர்வதேச வலைபின்னல், கண்ணுக்கு தெரிவது தான் விபச்சாரம், ஆள் கடத்தல்,போதை மருந்து,ஆயுத விற்பனைக்கான விலை என மிகப்பெரிய சந்தைகளுக்கு மூலமாகவும்/உதவியாகவும்/சார்பாகவும் இது இயங்கி வருவதால் இதை அத்தனை சுலபமாக ஒழிக்கமுடியாது.ஆனால் முறைபடுத்தி/சட்ட கண்காணிப்புக்கு உட்படுத்துவதன் மூலமும், இதிலிருந்து மீள விரும்புவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கான வழிமுறைகள் அமைத்து கொடுப்பதன் மூலமும் கட்டுக்குள் வைக்க முடியும். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மனித வளம் அதிகமாக இருப்பதாலோ என்னவோ இங்கு மனிதர்களுக்கு மதிப்பு இல்லை, அதனால் ஏதோ ஒன்றிற்கு விலை போக வேண்டியுள்ளது.
சினிமா/நடனஅரங்குகள்/மதுபான விடுதிகள் போன்றவற்றில் பணியாற்றி வாய்ப்பிழந்தவர்கள்,பெற்றோர்/கணவனால் கைவிடப்பட்டோர்,காதலனால் ஏமாற்றபட்டோர், திருநங்கைகள் போன்று சமூக அங்கீகாரம் இழந்தோர் ஆகியோருக்கு உடலை தவிர வேறு எதுவுமே இல்லாததால் அதுவே மூலதனம் ஆகிவிடுகிறது. எந்த சந்தையிலும் விலை போகாது,அதே சமயம் வாழ விரும்பும், வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ள  சில பெண்களுக்கான கடைசி வடிகாலாக இருப்பது விபச்சாரம்.இது வெட்ககேடானது என்றாலும்,வெட்கப்படுவதை தாண்டி வேறு எதையும் சடுதியில் செய்துவிடும் சாத்தியமில்லை.
உடலை விற்பனை பொருளாக பாவிக்கும் மனநிலை என்பது முன்னமே சொன்னது போல் சமூக/கலாச்சார விழுமியங்கள் சார்ந்தது.அமெரிக்காவில் PORN INDUSTRY என்ற முறைபடுத்தப்பட்ட ஒரு திரை துறையே இயங்கி வருகிறது.இதில் ஈடுபட விளையும் பெண்கள் தம் சுயவிருப்பத்தோடே உள்நுழைகிறார்கள். தென்னமெரிக்கா,பிரேசில், ஒரு சில ஆப்பிரிக்க நாடுகள்,கிழக்காசிய நாடுகளான  தைவான்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலும் சுயவிருப்போடு விரும்பி இந்த தொழிலை ஏனைய தொழில் போல் பாவித்து ஈடுபடுகிறார்கள்.அவர்களிடம் போய் இது தவறு என்றால் சிரிப்பார்கள்,ஏனெனில் அவர்கள் கலாச்சாரம் வேறு.
இந்த தொழில் சிலரின் காமத்திற்கு வடிகாலாய் இருகின்றது என்பது உண்மைதான், ஆனால் "முறையற்ற உடலுறவு" என்பது இந்த விபச்சார அரங்குகளுக்கு வெளியில் தான் அதிகம் நடக்கிறது.கற்பழிப்புகளாய், கள்ளஉறவுகளாய்,காதல் என்ற மென்போர்வையால் பலவாறாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. விற்கப்படவில்லை அவ்வளவே! ஆனால் விபச்சாரத்தில் இருக்கும் அளவுக்கு புரிதலும் தெளிவும் இல்லாத இந்த நிகழ்வுகளும் சமூக அவலங்கள் தான்(கலாச்சார பின்புலத்தோடு ஒப்பிட்டு பார்கையில்).இந்த தொழில் இருப்பதனால் கற்பழிப்புகள் குறையும், மற்ற பெண்கள் பாதுகாப்போடு இருப்பார்கள் என்பதெல்லாம் முழு மூடம்!
இறுதியாக: 
உலகில் எல்லா சமூகங்களும் ஆணாதிக்க சமூகங்கள் தான்.பல மில்லியன் ஆண்டுகளாய் தன் சுயவிருப்பத்திற்காக பெண்களை அடிமை படுத்திவைத்திருந்த ஆண் அவ்வளவு எளிதில் தன் இருப்பை இழந்து விடவும்மாட்டான், பெண்களால் அவ்வளவு விரைவாக சமபலம் பெற்று விடவும் இயலாது.காலமாற்றம் வரும் வரை காத்திருக்க தான் வேண்டும்,படி படியாய் தான் மாறும்.(இத சொன்னதுக்காக ஆணாதிக்கவாதி முத்திரை குத்த விரும்பினால், குத்துங்க எசமான் குத்துங்க,ஆனா நான் யதார்த்தவாதி).
சில இடங்களில் புரட்சி பேசிக்கொண்டு ஏனைய இடங்களில் பழமை பேசுவதால் என்ன பயன். விபச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என புரட்சி பேசுபவர்களே சமூக வலைதளிங்களில் "காமம்" பற்றி வெளிப்படையாய் பேசாதீர்கள் என பழமைவாதியாகி விடுகிறார்கள். ஒரே நேரத்தில் இரு படகில் பயணம் செய்யலாம், ஆனால் எதிர் எதிர் திசையில் செல்லும் படகில் பயணிக்கமுடியாது. சுயபரிசோதனை எல்லோருக்கும் தேவை(எல்லோரும் எனில் நானும் தான்)
-எடு சாட்டை
இந்த கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள் பற்றிய ஒரு அற்புதமான காணொளி! அனைவரும் காண வேண்டும்.
தொடுப்பு தந்து உதவியவர் தோழர் பாதசாரி(www.twitter.com/venkiraja)


No comments:

Post a Comment