Friday, May 18, 2012

மே பதினேழு!


மே பதினேழு! உலக வரலாற்றில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிதனத்தையும், அரச பயங்கரவாதத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்க வேண்டிய நாள்! ஆனால் ஏனோ அது நடக்கவில்லை என்றே படுகிறது! முதலாளித்துவ பொருளாதார உலகில் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் "தனி மனித உரிமை" தான் மிக அதிகமாக மறுக்கப்பட்ட ஒன்றும் கூட! ஹிட்லர் பேசிய அதே தேசியவாதம் அரிதாரம் பூசிக்கொண்டு தேசபற்று என்ற பெயரில் பல்லிளிகின்றது. தேசத்தின் பெயரில் செய்யபடும் கொலைகளும், தேசத்திற்காகவென கொடுக்கப்படும் உயிர்களும் நேரெதிர் திசையில் நின்று கொண்டு ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன.

உலகில் மனித உயிர்கள் மட்டும் தான் பெரிதானவை என்ற பரந்த பார்வையோடு பேசும் மக்கள் கூட முள்ளிவாய்க்கால் கொடுமை பற்றி முனகல் செய்ததோடு சரி! யூதம்,செர்பியம்,கம்யுனிச படுகொலைகள் பற்றிய வரலாற்றை வரி வரியாய் அவிழ்த்து விடுவோர் கூட முள்ளிவாய்க்கால் பற்றி மூச்சுவிடுகையில் தம்மீது முத்திரை ஏதேனும் விழுந்து விடுமோ என்பதில் அதீத கவனம் செலுத்துகிறார்கள்! ஒருவேளை படுகொலைகளில் கூட "கிளாசிக்" வகை தான் பிரபல்யமாக பேசப்படுமா? 

இறந்தவர்களுக்கான நினைவேந்தல் செய்வதற்கு இறந்தவர்களின் உறவினராய் இருக்க வேண்டுமா? "எப்போதும் எழவு செய்தி பற்றி பேசி என்ன பயன்?" பலமுறை இது பற்றி கேட்கப்படும் கேள்வி! பிறந்தநாள் கொண்டாடுபவர்களும், அன்புள்ளவர்களின் பிறந்தநாட்களை நினைவில் வைத்து பரிசளிக்கும் பலரும் தான் இத்தகைய கேள்வி கேட்பவர்கள். ஒருவர் இறந்துவிட்டார் என்பதால், இந்த நாளை அனுசரிப்பதன் மூலம் இறந்தவருக்கு இனி யாதொரு பயனும் இல்லை என்பது சுயாதாய - பொருளாதார பார்வை தானே! எம்.ஜி.ஆர் பிறந்தநாள்/இறந்தநாளுக்கு கருப்பு-வெள்ளை காகித சுவரொட்டி அடித்துவிட்டு , ஜெ பிறந்தநாளுக்கு வண்ண "ப்ளக்ஸ்" வைப்பதன் நுன்னரசியல் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும்!

படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவாய் அந்த நாளை நினைவில் கொள்ளாதது, நாளைய வரலாற்றில் அப்படி ஒரு நாளே இருந்திருக்கவில்லை என்பதை நிரூபணம் செய்வதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்பதே உண்மை. இந்த புரிதல் உணர்த்துவது யாதெனில், இன்று நாகரீக உலகால் கொடுமைகாரர்களாக முத்திரை குத்தப்பட்டிருக்கும் அனைவரும் "சாமர்த்தியம் இல்லாது வெளிப்படையாய் தவறு செய்தவர்களே!". உண்மையை மறைத்துவிட்ட / மக்கள் மனதில் நிலைத்திருக்காது செய்துவிட்ட சாமர்த்தியசாலிகள் வரலாற்றின் எல்லா பக்கங்களில் இருந்தும் தப்பித்துவிட்டார்கள் என்பதே "மூன்றாம் கோண பார்வை"யின் புரிதல்!  

இத்தகைய நிகழ்கால சாமர்த்தியசாலிகள் நிரம்ப உலவும் உலகில் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமைப்பட ஏதுமில்லை.

- "பெருங்கோபத்துடன்" ரகு

3 comments:

  1. அருமையான தேவையான பதிவு

    ReplyDelete
  2. சொல்ல எதுவும் இல்லை வார்த்தைகளால் உணர்த்த முடியாது உணர்வு தான் இது !!

    ReplyDelete
  3. நுண்ணரசியல் is correct.

    ReplyDelete