Saturday, May 11, 2013

அப்பா என்றால் .....

அப்பா என்பதற்கு என்ன அர்த்தம் என்று எப்போதாவது அகராதியில் தேடிப்பார்த்திருக்கிறோமா? பார்த்தாலும் கூட என்ன இருந்துவிடப் போகிறது? ஆனால் எந்த அகராதியிலும் இல்லாத ஒன்றுண்டு. அது,

அப்பா - அதிகம் புரிந்து கொள்ளப்படாத உறவு

உண்மைதானே.

"ஏப்ரல் மாதத்தில்" திரைப்படத்தில் ஒரு வசனம், "எனக்கு எங்க அப்பா தான் ஹீரோ... எனக்கு மட்டுமில்ல, எல்லா பசங்களுக்குமே" என. ஆனால் அதே அப்பா பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைக்கு (அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விதிவிலக்குகள்  தவிர்த்து) நிச்சியம் "Anti -Hero" வாகத்தான் இருந்திருப்பார்.


அப்பாவை திட்டியிராமல் கடந்து விட்ட பதின் பருவமென்பது நிச்சியம் யாருக்குமே இருக்காது. 

இவர் எப்போது தான் நம்மை புரிந்து கொள்வார் ?

அப்படி என்ன கேட்டு விட்டோம், இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாது என்றால் ஏன் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும்? 

இனி இவர் முகத்திலே விழிக்கவே கூடாது. 

அப்பாவிடம் போட்ட சண்டைகளுக்காக அம்மாவை துன்பப்படுத்தி சாப்பிடாமல் படுக்க போன இரவுகள்

என பதின் பருவத்தில் அப்பாவின் மீது கோபமில்லாமல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கவே முடியாது. 

அப்பாவின் உலகத்திற்கும் அம்மாவின் உலகத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அம்மாவின் உலகம் மாற்றமே இல்லாதது. பிள்ளை எவ்வளவு வளர்ந்தாலும் சரி, பிறந்த பிள்ளையிடம் எம்மாதிரியான பாசம் காண்பித்தாளோ அதில் துளியும் வேறுபாடில்லாமல் தான் அம்மா இருப்பாள். ஆனால் தந்தைக்கு அந்த சுதந்திரம் இருக்காது, என்ன செய்ய? அவர்களின்  உலகம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

எத்தனை பெரிய துன்பத்திலும் பிள்ளைகளுக்கு முன் அழுதுவிடக்கூடாது என்பதில் தொடங்கி எவ்வளவு பாசமிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதில் ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொள்வது என நீளும். அப்பாவின் பாசம் என்பது பிள்ளை வளர வளர பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். . 

விவரம் தெரியத் தொடங்கிய பிறகு தூக்கத்தில் எழுப்பி அம்மா சோறூட்டிய நிகழ்வுகள் எல்லோருக்கும் இருக்கும். அப்பா சோறூட்டிய நிகழ்வுகள் ஒரு சிலருக்கு வரமாக அமைந்தால் தான் உண்டு. விழிப்பு வந்து விட்ட ஒரு பின்னிரவின் அரைத்தூக்கத்தில், தூங்குவதாய் பாசாங்கி கொண்டே மென்ற அப்பா ஊட்டிய ஆம்லேட்டுக்குள் மடித்து வைத்த புரோட்டா இப்போது கூட எனக்கு சொர்க்கமாக இனிக்கிறது. 

"தோளுக்கு மேல வளந்துட்ட, இனி உன்னை அடிச்சா எனக்குத்தான் அசிங்கம்" - இப்படித்தான் எனது சுயத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். You are on your own என்பதன் அர்த்தமது.


செலவழிக்க காசு கொடுக்கிறவர், கொடுத்த காசை எப்படி செலவழிச்ச என கணக்கெழுத சொல்றவர், காசே கொடுக்காதவர், உனக்கெதுக்கு காசு என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கியாறேன் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமா அப்பா இருப்பார்.

நண்பனொருவன் சிகிரெட் குடிக்கிற செலவை கூட கணக்கு நோட்டுல எழுதுவான். 'ஏண்டா இதைக்கூட எழுதணுமா? செலவுன்னு எழுதினா போதாதா?'ன்னு கேட்டா, 'சிகிரெட் குடிக்கிறது, கணக்கெழுதுறது இரண்டுமே அப்பாவை பாத்து கத்து கிட்டது'ன்னு சொன்னான். அப்பா சிகிரெட் குடிக்கிறத பார்த்து வருத்தப்படாத பெண் பிள்ளைகளும், ஆசைப்படாத ஆண் பிள்ளைகளும் இருக்க முடியாதுதானே.

அப்பா பசங்க உறவில் பதின் பருவம் ஏற்படுத்தும் விரிசலும் புரிதலற்ற தன்மையும் சரியாக, பசங்க அப்பாவகுற வரை காத்திருக்கணும். ஆனா பெண் பிள்ளைகள் தான் பாவம், அதுவும் நம்ம சமூக சூழல் பெண்கள் வயசுக்கு வந்த அடுத்த கணத்துல இருந்து அப்பாவை அவளிடம் இருந்து  உளவியல் ரீதியா நிரந்தரமா பிரித்துவிடுகிறது. பாவம் பெண்கள் ஒரு பால்ய நண்பனை நிரந்தரமாக இழந்துவிடுகிறார்கள். அப்பாக்களோ காமம் கடந்த காதலியை பறிகொடுத்து விடுகிறார்கள்.

அப்பா-பெண்கள் உறவு பற்றி வள்ளுவர் கூட பேசவில்லை- அவர் ஆணாதிக்கவாதிதானோ? 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகனை அவயத்துள் முந்தி இருப்ப செய்தல் தந்தை மகனுக்காற்றும் நன்றியாம். இவங்க அப்பா  என்ன தவம்  செய்தாரோ  அப்படின்னு மகன் அப்பனுக்கு பேர் வாங்கி தருவது "உதவியாம்". வள்ளுவனுக்கு மறை கழண்டு போச்சா என்ன ? நிச்சியமா இல்லை.

அமீபா தொடங்கி திமிங்கிலம் வரை பிறப்பெடுக்கிற ஒவ்வொரு உயிரின் லட்சியமும் என்ன தெரியுமா? தன் சந்ததியை உருவாக்கி விட்டு போவது தான். இந்த ஒற்றை காரியத்துக்காகத்தான் உலகமேஇயங்கி கொண்டிருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. அப்படி இருக்கும் போது தன் சந்ததியை பரப்பும் வாய்ப்பு கொடுக்கும் பிள்ளைக்கு, எல்லாருக்கும் முன் வைத்து பெருமை சேர்த்து தருவது தான் ஒரு தந்தை செய்யும் நன்றிக்கடன். வம்ச விருத்திசெய்வதற்காக பிறக்கும் பிள்ளை, வம்ச விருத்தியோடு தந்தைக்கு பேரும் வாங்கித்தருவது அப்பனுக்கு செய்ற உதவிதானே? Does Really Valluvar Rocks?!

- திடீரென அப்பா புராணம் எழுத என்ன காரணமென்றால் அடுத்ததுத்து படிக்க நேர்ந்த சில சேதிகள். அவை இதோ.


2. 

-ரகு.சி

15 comments:

  1. //அப்பா-பெண்கள் உறவு பற்றி வள்ளுவர் கூட பேசவில்லை- அவர் ஆணாதிக்கவாதிதானோ? // தனியா ஒரு பதிவு எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா எழுதலை ரகுசி?:)

      Delete
    2. சீக்கிரமே எழுதிடலாம் முருகா..

      Delete
  2. அன்னையர் தினத்துக்கு அன்னைக்கு ஒரு சிறந்த பரிசு தந்தையைப் பற்றிய இப்பதிவு!

    amas32

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு :') @shanthhi

    ReplyDelete
  4. // அப்பாக்களோ காமம் கடந்த காதலியை பறிகொடுத்து விடுகிறார்கள். // இருத் தரப்பிலும் கேட்டறிந்தது !!

    ReplyDelete


  5. நிறைய வரிகள் ரொம்ப பாதிச்சிடுச்சு, செம்மட்டியால் தலைல அடிக்கிறது மாதிரி!

    நன்றி :-)

    அமீரா என்கிற நறுமுகை :-)

    ReplyDelete
  6. //தந்தை மகற்காற்று நன்றி//

    மகற்கு + ஆற்றும்
    * "மக" = "ன்" னா? "ள்" ளா?
    * "ற்" போடுறாரு ஐயன்! ஏன்?

    மத்த இடங்கள்-ல்ல எல்லாம், "தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்", -ன்னு "மகன்" -ன்னே நேரடியாச் சொல்லுறவரு,
    இங்கிட்டு மட்டும் "மகற்கு" என்பதன் பொருள் என்னவோ? மொதல்ல இது மகனா? மகளா? -ன்னு பாத்துருவோமா?:)

    அதுக்கும் முன்னாடி, இன்னோரு குறள்! = "செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
    இங்கிட்டு "மகற்கு" - ஆணா? பெண்ணா?:)

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு, ஆனா செய்ந் நன்றி கொன்றார்க்கு உய்வில்லை-ன்னு சொல்லுறாரே...
    நன்றி இல்லாதவர்கள் = ஆண்கள் மட்டும் தானா?:)

    செய்ந்நன்றி கொன்ற "மகற்கு" -ன்னு, ஐயன் இங்கிட்டு கூடப் "பொதுச் சொல்லை" வைப்பது ஏனோ? யோசிச்சிப் பாத்து இருக்கீயளா?
    ---

    இந்த அதிகாரம் "புதல்வரைப் பெறுதல்" ங்கிற தலைப்பில் வரும்!
    புதல்வர் = Both புதல்வன்/புதல்வி!

    அதில் முதல் எட்டு குறட்பாக்களில், மகன்/ மகள் -ன்னு காட்டாம, பொதுச் சொல்லாவே வரும்! (மக்கள், புதல்வர், மகற்கு etc etc)

    * குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் "மக்கள்"
    * தந்தை "மகற்கு" ஆற்றும் நன்றி
    * தம்மின் தம் "மக்கள்" அறிவுடைமை
    என்பதே அந்த sequence..

    கடைசி இரு குறள் மட்டுமே...
    * தன் "மகனைச்" சான்றோன் எனக் கேட்ட தாய்
    * "மகன்" தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை எந் நோற்றான்?
    ---

    ஆனால், பெரும்பாலும் உரையாசிரியர்கள், மகற்கு = மகனுக்கு -ன்னு எழுதிருவாய்ங்க; இந்த நுட்பத்தையெல்லாம் கண்டு கொள்வதில்லை!
    பொருள் சொல்லீறணும் -ங்கிற துடிப்பு மட்டுமே இருப்பதால், குறளை "வாசி"ப்பது ஒன்று; "சுவாசி"-ப்பது மற்றொன்று!

    ReplyDelete
  7. * மகற் கோடல்
    * மகண் மறுத்தல்
    -ன்னு மணப் பருவத்தில், பெண்ணைக் கொள்வது/ கொடுப்பது பற்றிய திணை/ துறைகள்;

    * இதுல "மகற் கோடல்" -ன்னா மட்டும், பெண் கொடுப்பது -ன்னு எடுத்துக்கறோம்!
    * ஆனா "மகற்கு ஆற்றும்" -ன்னா மட்டும், ஆண் -ன்னு மாத்தி எடுத்துக்கறோமே?
    யாரு ஆணாதிக்கவாதி? = வள்ளுவனா? உரையாசரியர்களா? :))

    "மக" என்பதே பொதுவான வேர்ச்சொல்! (மக-ப்பேறு, மக-ப்பால், மக-ற்கு)
    ஒங்க அக்கா "மக்கா" என்பதும் இதுவே:) மக்கள் என்பதிலிருந்து பிறக்கும்!

    நம் மக்கள் = நமக்குப் பிறந்த பிள்ளைகள்
    உலக மக்கள் = பூமி(த் தாய்க்குப்) பிறந்த பிள்ளைகள்

    இன்னிக்கி, பேச்சு வழக்கில், அக்கா "மக" = அக்கா "மகள்" -ன்னு ஆயிருச்சி!
    வள்ளுவர் காலத்தில் "மக" = பொதுவான சொல்லே! செய் நன்றி கொன்ற "மகற்கு"!
    ---

    ஒரு தந்தை - மகன்/மகள் - ரெண்டு பேருக்குமே "நன்றி" காட்டணும்!
    ஏன் "நன்றி" -ங்கிற சொல்லு?

    ஏன்-ன்னா, மகன்/மகள் = அவன் ஆண்மையை வெளிப்படுத்த உதவியவர்கள்!
    அவன் வாழ்க்கைத் துணை = அவள் பெண்மையையும் வெளிப்படுத்த உதவியவர்கள்!
    Children NOT born for you! but born through you!

    கட்டிளங் காளை, கட்டிலை ஆட்டினாலும், அந்த "ஆண்மை"யெல்லாம் உலகம் பார்க்கப் போவதில்லை!

    உலகம் பார்ப்பது = அவர்கள் அன்பால் விளைந்த அடையாளங்களை மட்டுமே!
    இப்படி மாந்த இனக் கதையில், தன்னையும் தொடர் கதை ஆக்கியதற்கே = அந்த "நன்றி"!

    (அதுக்காக, தொடர இயலாது போனவர்கள் மேல் தவறில்லை; அவர்களுக்கு அந்த நன்றி சொல்லும் வாய்ப்பு அமையவில்லை; அவ்வளவே!)

    அந்த நன்றியை எப்படிக் காட்ட வேணும்? = அவையத்து முந்தி இருப்பச் செயல்!

    கவனிங்க; சட்டப் பேரவையில் மகனை/மகளை "முதல்வன்" ஆக்குவது இல்லை!:)
    "முதல்வன்" ஆக்குவது வேறு; "முந்தி" இருக்கச் செய்வது வேறு!
    1stRank "வாங்கிக்" குடுப்பது வேறு; 1stRank வாங்கணும் என்ற முந்துதல் உணர்ச்சி வேறு!

    விந்துப் போட்டியில் "முந்திய" மகன்/மகள்!
    அவர்களை "முந்தி" இருப்பச் செயல்;
    வாழ்வுப் போட்டியில் முந்தச் செய்வதும், அதே தந்தை காட்டும் நன்றியல்லவா?

    (தாய்க்கும் நன்றி உண்டு; ஆனால் தந்தைக்கு அதிகமாக உண்டு!!
    தாயின் நன்றிக் கடன், அவள் பட்ட பாடுகளால் குறைந்து,
    தந்தையின் நன்றிக் கடன் மட்டும் அதிகமாகி விடுகிறது)

    = முந்து தமிழ்மாலை கோடிக் கோடி! முந்தி இருப்பச் செயல்!

    ReplyDelete
  8. ஆனா, அதுக்காக, சங்கத் தமிழை "ஆணாதிக்கம் இல்லாத் தெய்வம்" Range-க்கு வைக்க மாட்டேன்:)

    எனக்குத் தமிழ் பிடிக்கும் என்பது வேறு; அதுக்காகச் சங்கத் தமிழில் ஆணாதிக்கமே இல்லை என்று சொல்வது வேறு!
    ஆணாதிக்கம் உண்டு! வள்ளுவனிடம் இல்லை என்பதே சொல்ல வந்தேன்!

    எழுத்தில் என் விசுவாசம் மெய்யான தமிழுக்கு மட்டுமே! முருகனுக்குக் கூட இல்லை!
    -----

    புதல்வரைப் பெறுதல் 1-8 குறள்களில், மக்கள்/ மக/ மகவு -ன்னு பொதுவாகச் சொல்லும் வள்ளுவன்...
    கடைசி இரண்டு குறளில் மட்டும், "மகன்" -ன்னு குறிப்பிட்டுச் சொல்வது ஏனோ?

    * ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்
    * மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை
    என் நோற்றான் கொல்!’ எனும் சொல்

    ஏன், பெத்த பொண்ணைச் "சான்றோன்" -ன்னு கேட்டா அம்மா உவக்க மாட்டாளா?
    உவப்பாள்!
    ஆனால் "பெரிது" உவக்கும் = அவள் கணவன்!

    அதான், வாழ்க்கைத் துணைநலத்தில், பெற்றோர் அவளுக்காக உவப்பதைச் சொல்லியும் விட்டார்:
    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

    ஒரு பெண்ணைச் சான்றோள் எனக் கேட்டல் = பெற்றவர்க்கு உவப்பே! ஆனா inferiority complex இல்லாத கணவனுக்கு = "பெரிது" உவக்கும்! மனை மாட்சி!
    ---

    அதே போல் தான்.. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்;
    அப்போ, மகள் தந்தைக்கு உதவி ஆற்ற வேணாமா?

    கண்டிப்பா ஆற்ற வேணும்; ஆனா அந்த உதவி (எ) செய்கையால் தான் "இவளைப் பெற என்ன நோன்பு நோற்றானோ?" -ன்னு சொல்ல மாட்டார்கள்!
    அவள் உதவி - அன்பால், தானே செய்யும் உதவி! நோன்பால் விளைந்த உதவி அல்ல!

    பெண்ணுக்கு, இயற்கையாகவே அன்பை வெளிப்படுத்தத் தெரியும்
    ஆண், கொஞ்சம் மெனக் கெடுவான்:)

    அதான் மெனக் கெடுதல் = நோற்றல்! இவன் தந்தை எந் நோற்றான்? மகள் நோற்காமலே உதவி செய்வாள்:)
    vaLLuvar is a psychologist; He knows how sons & daughters "approach" the parents:)
    Next to vaLLuvar, you also know:)
    You have summed up a "boy's approach" to father, in your post!

    ReplyDelete
  9. சங்க காலப் பெண் புலவர்கள்
    = தன் "மகளைச்" சான்றோன் எனக் கேட்ட தாய்-தந்தையர் உவந்தனர்;
    = ஆனால் ஒரேயொரு காதலன்/கணவன் உவக்கவில்லை:(
    Inferiority Complexஆல் பிரிந்து விட்டான்! ஆனால்... அவள்,அவனே-ன்னு வாழ்ந்தாள்!

    Not bcoz, she is obedient girl, but bcoz of intensity of love!
    மற்றபடி, ஆண்கள் மட்டுமே "அங்க வர்ணனை" பாடிய காலங்களில், துணிஞ்சி பெண் உறுப்பைப் பாடியவள் இவள்!
    "கன்றும் உணாது, கலத்தினும் படாது" என்று, தன் அல்குலில் வெள்ளைப் பட்டு ஒழுகியதை publicஆ பாடிய புரட்சிப் பெண் இவள்!

    இந்தப் பொண்ணு பேரு = "வெள்ளி வீதியார்"
    Other women poets, have written about this girl's tragic story, in their poems!

    இதெல்லாம் அறிந்து தானோ என்னவோ, ஐயன் வள்ளுவன்...
    பெற்றோர் உவக்கும்,
    கணவன் "பெரிது" உவக்கும் -ன்னு காட்டிவிட்டுப் போனான்!

    சங்க காலப் பெண் புலவர்கள்
    = 32 பேர், 170 கவிதைகள்
    = அவையத்து முந்தி இருப்பச் செயல்!
    http://dosa365.wordpress.com/?attachment_id=2485

    ReplyDelete
    Replies
    1. முருகா... மிக்க நன்றி. நேரம் ஒதுக்கி இவ்ளோ விளக்கம் தந்ததிற்கு நன்றிகள். தப்பா எழுதுனா இப்படி அடிக்கடி வந்து விளக்கம் தருவதாய் சொன்னால் இனி ஒவொரு பதிவையும் இப்படி தப்பு தவறுமாகவே எழுதுகிறேன்..

      Delete
    2. //இனி ஒவொரு பதிவையும் இப்படி தப்பு தவறுமாகவே எழுதுகிறேன்..//

      :)))
      சேச்சே..தவறு-ன்னு ஒன்னுமில்லை! வெறும் கருத்து தானே!

      "நமக்குப் பிடிச்சிருக்கு" -ன்னு மனத்திலோர் கருத்தை உருவாக்கிக் கொள்வதை விட,
      "மெய்யான தமிழ்த் தரவுகள்" -ன்னு கருத்தை உருவாக்கிக் கொள்வது நன்று அல்லவா?

      எனக்கு முருகன் பிடிச்சிருக்கு என்பதற்காக, வேங்கடத்தில் இருப்பது முருகன்-ன்னு சொல்ல மாட்டேன்;
      ஏன்-ன்னா, இளங்கோ அடிகளும், பதிற்றுப் பத்தும், சங்கத் தமிழும் காட்டுவது, ஆழி-சங்கு ஏந்திய மாயோனே!

      அது போலத் தான் இதுவும்!
      பாட்டஞ் சொத்து (வள்ளுவம்) என்பதால் சொத்து ஆசை புடிச்சி வந்தேன்:)

      Delete
  10. தாயின் அன்பு விஷேசமானது தான். ஆனால் தந்தையின் அன்பு எந்த எல்லையையும் தாண்டக்கூடியது.உன்னதமானது!

    ReplyDelete
  11. படித்துக் கொண்டே போனால் பிறவிகள் போதாது. 'எனக்கினி பிறவி வேண்டாம்' என்கிற முடிவை, பட்டிணத்துச் சித்தனும், அருணகிரி நாதனும், ஔவையும் எடுக்கலாம். அவர்கள் தமிழ்ழாழ்தவர்கள். எளியேன் என்னால் எடுக்க முடியாது. தமிழ் ஞானம் முழுமையாகும்வறை தமிழனாய்ப் பிறவிகள் தொடரட்டும்.
    ரகு. சி, கண்ணபிரான (KRS), உங்கள் சத்தான வாதங்கள் தொடரட்டும்
    ஆ சுவாமிநாதன்
    மடிப்பாக்கம்

    ReplyDelete