Sunday, March 18, 2012

ஏன் வேண்டும் ஈழம்-2


முந்தைய பதிவில் சொன்னது போல "ஈழம்" என்பது வரலாறு முழுக்க தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட விடயமே. ஒன்றாய் சேர்ந்து வாழ வரலாறு நெடுக கடந்த ஐம்பது ஆண்டுகளை தவிர எந்த காலத்திலும் தமிழர்கள் மறுக்கவில்லை. எல்லைகோடுகள் இல்லாத அவரவர் பூர்வீக நிலங்களில் வாழும் உரிமை மறுக்கப்படுகின்ற போது வேலி போட்டுகொண்டு வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீது பயங்கரவாதம் என்ற முத்திரை எளிதாக குத்தப்பட்டுவிடுகிறது

அரச பயங்கரவாதம் என்பது சட்ட ஒழுங்காய் பரிணாமம் பெறுகையில் "மூச்சு"விடுவது கூட "புரட்சி குரல்" என்று வியாக்கியானப்படுகிறது.  


2."இந்த தமிழர்கள் ஏன் சிங்களவர்களோடு சேர்ந்து இணக்கமாக வாழக் கூடாது?"

வாழலாம்.
வாழ்ந்திருக்கலாம்

ஆம் இந்த இரண்டுமே பதில்கள் தான். அதென்ன ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள்

ஒரு ஐம்பது ஆண்டுகள்,குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்கீழ்வரும் நிகழ்வுகள் நிதர்சனமாகியிருந்தால்வாழலாம் தான்.
  • சிங்களவர்கள் தமிழரோடு இணக்கமாக வாழ விரும்பியிருந்தால்   வாழலாம்.
  • சிங்களவர்கள் தமிழர்களை சக மனிதர்களாய் எண்ணுவதாய் இருந்தால் வாழலாம்.
  • சிங்கள அரசாங்கம் சிறுபான்மை தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் கட்டாய சிங்கள குடியேற்றங்கள் செய்யாது இருந்திருந்தால் வாழலாம்.
  • கல்வி/வேலை போன்ற விடயங்களில் தமிழர்கள் சமமாக நடத்தப்பட்டிருந்தால் (இட ஒதுக்கீடெல்லாம் கேட்கவில்லை) வாழலாம் 
  • சிங்களவர்கள் தமிழர்களை அம்மண்ணின் மைந்தர்கள் என்று  மனதளவில் ஏற்றுகொண்டால் வாழலாம்.

கீழ்வரும் நிகழ்வுகள் கடந்த முப்பது ஆண்டுகளில் நிகழாதிருந்திருந்தால் கூடவாழ்ந்திருக்கலாம்.
  • சிங்கள அரசாங்கம் / சிங்கள அரசியல் கட்சிகள் இனவெறியை தத்தம் கொள்கை  ஆக்காதிருந்திருந்தால் வாழ்ந்திருக்கலாம்.
  • கையறு நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் தம் கையில் ஆயுதம் ஏந்தாதிருந்திருந்தால்வாழ்ந்திருக்கலாம்.
  • சிங்கள காடையர்கள் தமிழ் பெண்டுகள் மேல் தம் ஈனக்கைகளை வைக்காதிருந்திருந்தால்வாழ்ந்திருக்கலாம்.
  • தமிழ் மக்களின் நிலங்களில் கொத்து குண்டுகள் போடாதிருந்திருந்தால்வாழ்ந்திருக்கலாம்.
  • தமிழ் குழந்தைகள் கூட இனவெறி அரசியலுக்கு பலியாடுகளாய் ஆகாதிருந்திருந்தால்வாழ்ந்திருக்கலாம்.
  • மாபெரும் இன அழிப்பு போரான இந்த இறுதி உத்தம் நிகழாதிருந்திருந்தால்  வாழ்ந்திருக்கலாம்.
  • சிங்களம் தன் கோர பற்களை இத்தனை கொடூரமாய் இந்த இறுதி யுத்தத்தில் காட்டதிருந்திருந்தால் வாழ்ந்திருக்கலாம்.
இனியும் ஒன்றாய் வாழுங்கள்இனத்துவேசம் வேண்டாம், உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு வாழுங்கள் போன்ற அறிவுரைகள், கற்சிலைக்கு முன்பு நின்றுகொண்டு கடவுளுக்கு வேண்டுதல் விடுதல் போலத்தான்.

வலிந்து திணிக்கப்பட்டவைகளை தாமாக திருப்பி கொடுக்கவும் முடியாது, கொடுத்தவரே திருப்பி எடுக்க நினைத்தாலும் முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை தனி நாடு கோரிக்கை என்பது மக்களின் விருப்பமாக இருந்தது, ஆனால் இந்த இறுதி யுத்ததின் பிறகு அது காலத்தின் கைகளில் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி காலம் தான் முடிவு செய்யும்

அதுவரையில் இதை வைத்து " 'அரசியல்' பிழைப்போர்" பிழைத்து கொள்ளலாம், அறம் கூற்றாகும் ஒரு நாள்.


தொடரும்....


9 comments:

  1. நல்ல கட்டுரை .

    நல்ல ஒப்புமை //சிங்கள காடையர்கள்//

    ReplyDelete
  2. மஹா வம்சம் - சிங்கள பௌத்த வரலாற்று நூல். அதிலிருந்து ஒரு குறிப்பு:-
    பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வட பகுதியில் இருந்த லாலா நாட்டின் இளவரசன் விஜய என்பவன் தர்மம் தவறி , முறை தவறி நடந்ததால் அவனது தந்தையால் நாடு கடத்தப்பட்டான். அவனுடன் அவனது எழுநூறு தோழர்களும் சேர்த்து நாடு கடத்தப்பட்டனர். கப்பலில் அடைக்கப்பட்டு கடலில் விடப்பட்ட அவர்கள் கடலில் அலைந்து கடைசியில் கப்பல் தரை தட்டிய இடம் தம்பபன்னி. வரலாற்று குறிப்புகளில் தம்மசீலம் / தர்மசீலம் என்று இலங்கை குறிப்பிடப் படுகிறது. தம்பபன்னி இப்போதைய திரிகோண மலையின் அருகே உள்ள தம்பலகாமம். அப்போது உடைந்த கப்பலில் இருந்து நிலத்திற்கு வந்தவர்ளை வரவேற்றது அப்பகுதியின் இளவரசியாக இருந்த குவேனியும் அவளது தோழிகளும். காலப் போக்கில் குவேனியை விஜய திருமணம் செய்துகொண்டான். அவனது தோழர்கள் குவேனியின் தோழிகளைத் திருமணம் செய்து கொண்டனர். குவேனி சில ஆண்டுகளில் சாவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் தென் பகுதியிலிருந்து வந்த அரச குடும்ப பெண்ணை விஜய மணந்துகொண்டு இலங்கை முழுதையும் கைப்பற்றி மன்னாகினான். (அப்போது அவன் எந்த மதம் என்று யாருக்கும் தெரியாது.) இந்தியாவின் அசோகர் காலத்தில், சங்கமித்தை என அழைக்கப்பட்ட பெண் துறவியால் இலங்கையில் பௌத்த மதம் அறிமுகப் படுத்தப் பட்டது.

    குறிப்பு 2:-
    இந்தியாவின் தென் பகுதியில் இருந்த ஒரு யாழ் வல்லுனன் அதுவும் கண் தெரியாதவன், மனைவி அசிங்கமாகத் திட்டியதால் மனம் நொந்து கடலில் செல்கிறான். எப்படியோ சிங்கள மன்னனின் அரசவைக்கு வந்து சேர்கிறான். மன்னன் முன் யாழ் வாசிக்கிறான். மன்னன் அவன் யாழ் இசையில் மயங்குகிறான். அவனுக்கு நாட்டின் வடக்கே உள்ள பொட்டல் வெளி நிலத்தை பட்டயம் எழுதிக் கொடுக்கிறான். யாழ் பாணன் தனது ஊரவர்களைக் கொண்டு வந்து குடியேற்றி நாடு பெருக்கினான். அது தான் இன்றைய யாழ்ப்பாணமாம்.
    இது மகா வம்சம் சொல்வது.


    யாழ்ப்பாணத்தின் வட கரையில் மாவிட்டபுரம் என்று ஒரு ஊர் உள்ளது. இந்தியாவின் தென் நாடு ஒன்றின் மன்னனின் மகள் ஒரு முனிவரை அழகற்றவர் என்று பரிகசித்ததால் சாபம் பெற்று முகம் குதிரை முகம் போல் ஆகிவிட்டது. விமோசனம் வேண்டினாள். முனிவர் சொன்னது "ஈழத்தில் வடகரையில் உள்ள கோயிலில் உள்ள குளத்தில் நீராடி முருகனை வழிபடு, குறை நீங்கும்" என்றார். அப்படியே வந்து வேண்டினாள். குதிரை முகம் நீங்கி பேரெழில் பெற்றாள். அன்றிலிருந்து அந்த இடம் மா ( குதிரை) விட்ட (நீங்கிய) புரம் ஆனது.

    இன்னும் பல உதாரணங்கள் பல வரலாற்று நூல்களில் உண்டு. ஒப்பிட்டு பார்த்தால் யார் வந்தேறு குடிகள் என்பது தெரியும்.
    கடல்கோள் கொண்ட லெமுரியா (குமரி) கண்டத்தின் எந்த பகுதியின் மக்களின் சாயலும் இந்த இன வெறியர்களிடம் இல்லவே இல்லை. இதற்கு அவர்களது மகாவம்ச நூலே சாட்சி.

    ReplyDelete
    Replies
    1. மகாவம்சம் துட்ட காமிணி கதை வரை படித்துள்ளேன் மேலும் படிக்க வேண்டும். மகாவம்சம் என்பது வரலாற்று தரவுகளை கொண்டு தொக்குக்கப்பட்டது. தரவுகளின் காலத்துக்கும் தொகுத்த காலத்துக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. மேலும் தொகுக்க பட்ட காலத்தில் நிலவிய , அரசியல் /மத /கலாச்சார ஆளுமைகளுக்கு ஏற்ப தரவுகள் திரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருப்பதர்க்கான சாத்திய கூறுகள் நூறு சதவிகிதம் வாய்ப்புள்ளது. மகாவம்சம் இலங்கையின் வரலாறாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு பதிவும், தமிழர்களை வந்தேறிகள் என்று குறிப்பதற்கான தடயங்களை தேவையில்லாத விடத்தும் முன் மொழிவது, உண்மையை மறைக்க ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்த பௌத்தம் மேற்கொண்ட அவசரகுடுக்கை தனமான முயற்சியே என்பது தெளிவு!

      தென் தமிழகத்தில் சமணமும், பௌத்தமும் முற்றிலுமாக சைவர்களால் கருவறுக்கப்பட்ட நிகழ்வின் பாதிப்பு சிங்கள பௌத்த துறவிகளை அத்தகைய நிலைமை சிங்கள தேசத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எப்படி கிறித்துவம் அரசுகளை தழுவிக்கொண்டு வளர்ந்ததோ அதே பாணியை பின்பற்ற செய்தது(சிங்கள் அரசன் பௌத்த குருமார்களால் முடி சூட்டப்படவேண்டும், பௌத்த சங்கங்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றவனே அரசனாக இயலும், போன்ற வரைமுறைகளை கொண்டு இதை அறியலாம்). எப்படி கிறுத்துவம் சிலுவைபோர்கள் என்ற போர்வையில் யூதர்களை உலகின் எல்லா மூலைக்கும் விரட்டியடித்ததோ, அதே போல தமிழர்களை அவர் தம் வாழ்விடம் விட்டு விரட்ட, ஒவ்வொரு சிங்கள பெளத்தனின் இரத்தத்திலும் தமிழ் விரோத மனப்போக்கை விதைப்பதற்காக வெகு சூட்சமமாய் தொகுக்கப்பட்டதே மகாவம்சம்.

      ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும். மேலும் இத்தகைய உள்ளீடுகள் கொடுத்து உதவவும். நன்றியுடன்

      -ரகு.

      Delete
  3. தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வதற்கு சில காரணங்கள்:- விஜய னின் காலத்திற்கு பின்னர், இலங்கையின் வட பகுதியில் மீண்டும் தமிழ் அரசுகள் பலம் பெற்று ஒவ்வொரு பகுதியிலும் ஆட்சி தமிழர்களால் பரிபாலிக்கப் பட்டது. றுகுணு அல்லது றோகண என்னும் பகுதி- இலங்கையின் மலைகள் சூழ்ந்த பகுதியும் இப் பகுதியால் அரணாக இருந்து காக்கப் பட்ட தென் பகுதியும் - விஜய பரம்பரையினருக்கு சிறந்த பாதுகாப்பு மிக்க இடமாக இருந்ததால், படிப்படியாக இந்த இடத்தினை தமது அரசுக்கு உட்பட்ட இடமாக மாற்றிக் கொண்டனர். காலம் காலமாக தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து இலங்கை முழுவதையும் மாறி மாறி அரசாண்டனர். துட்ட காமினி ( துட்ட கெமுனு) யின் தந்தை தமிழ் மன்னனான எல்லாளன் என்னும் மன்னனுடன் போரிட்டுத் தோற்று இருந்தானாயினும், எல்லாளன் மீண்டும் அவனையே மன்னனாக்கி விட்டு வன்னி மண்ணையே நீதி பரிபாலனம் செய்தான். சிறு வயதில் இருந்தே தாயால் தமிழின வெறுப்பு ஊட்டப்பட்டு வளர்க்கப் பட்ட கெமுனு, தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினான். அப்போது கூட கட்டிலில் முடங்கிக் கொண்டு தான் தூங்குவானாம். தாய் கேட்டதற்கு, அம்மா தலைப் பக்கம் தமிழர்களும் கால் பக்கம் கடலும் இருக்கிறதே நிம்மதியாய் நான் எப்படித் தூங்குவேன் என்றானாம். எல்லாளனுடன் போர் தொடுத்தான். எல்லாளன் மூப்புத் தசையில் இருந்தாலும், எல்லையில் வைத்து போரை எதிர்கொண்டு , தானே தலைமையேற்று போரிட்டான். கெமுனு வெற்றி கடினம் என்று தெரிந்து வஞ்சக வழியை நாடினான். எல்லாளன் அமர்ந்து இருந்த யானையின் கால் சறுக்கச் செய்து அக்கணமே எல்லாளனைத் தாக்கி கொன்றான். இப்படி மாறி மாறி தமிழ் சிங்கள அரசர்களால் இலங்கை ஆளப்பட்டு வந்தது.

    யாழ்ப்பாண அரசு ஒல்லாந்தர் காலத்தில் சங்கிலி செகராச சேகரனால் ஆளப்பட்டது. கைலாய வன்னியன் என்பவனால் வஞ்சிக்கப்பட்டு ஒல்லாந்தரால் சங்கிலி மன்னன் வீழ்த்தப் பட்டான். வன்னி அரசை ஆண்ட பண்டார வன்னியன், காக்கை வன்னியன் என்பவனால் வஞ்சிக்கப் பட்டு ஒல்லாந்தரால் வீழ்த்தப் பட்டான். றோகணத்தை ஆண்ட கடைசி மன்னன் , தமிழ் மன்னனாகக் கருதப்பட்ட விக்கிரம ராச சிங்கனை வஞ்சனையால் ஆங்கிலேயர் வீழ்த்தினர்.

    மேற்கத்தைய படையெடுப்புகளுக்கும் கெமுனு காலத்திற்கும் இடையில், பல தடவை இந்திய மன்னர்களும் இலங்கையைக் கைப்பற்றி அரசாண்டனர். இவர்களில் பாண்டிய , சோழ மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் காலத்தில் சென்ற படை வீரர்கள், வணிகர்கள், மதகுருமார்கள், புனர்வாழ்வுப் பணியாளர்கள் பெரும்பாலானோர் இலங்கையிலேயே வாழத் தொடங்கி விட்டனர். இவர்களைப் பற்றி வந்தேறு குடிகள் என்று மட்டுமே சிங்கள அரசவைகள் அறிந்திருந்தன. இந்தியப் பேரரசுகள் வலிமையிழந்த போது அவற்றின் ஆட்சிப் பிரதேசங்களை கைப்பற்றிய சிங்கள அரசுகள், அங்கு வசித்த எல்லா மக்களையும் வந்தேறிகள் என்று வகைப்படுத்தினர். பின்னர் ஒவவொரு சந்தர்ப்பத்திலும் வல்லமை பெற்று எழுந்த்த தமிழ் அரசுகள், சிங்கள அரசுகள் மீது ஆதிக்கம் கொண்டிருந்தாலும், நட்புறவுடன் இருந்தாலும், தமிழர்கள் வந்தேறிகள் என்ற கருத்துருவை மாற்ற முடியவில்லை அல்லது மாற்ற முயற்சிக்கவில்லை.
    இன்றைய காலத்தில், மலையகத் தமிழர் அங்கு ஒரு இனம். உண்மையில் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய கொண்டுவரப்பட்ட வெள்ளையரால் அடிமைகளான மக்களும், ஏமாற்றப் பட்ட மக்களும் தான் இவ்வாறு மலையகத் தமிழர் என்று வகைப்படுத்தப் பட்டனர். சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம், ஒரு சிறு மக்கள் தொகை பரிதவிக்கும் முறையில் நாடு கடத்தப் பட்டனர்.

    இப்போதைய மகாவம்ச நூலில் தமிழர் விரோதப் போக்கு அப்பட்டமாய்த் தெரிந்தாலும், எழுதியவர்கள் தங்களை அறியாமல் பல உண்மைகளை ஆங்காங்கே விட்டுவைத்துள்ளனர். உதாரணத்திற்கு குவேனி-விஜய கதை, எல்லாளன் - துட்ட கெமுனு கதை.

    ( இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மானிப்பாய், கந்தரோடை, சுழிபுரம் ( ஆதிப் பெயர் சோழியபுரம்), தொண்டைமானாறு ( பாஸ்கரத் தொண்டைமான் என்னும் பல்லவ மன்னனின் நட்பைப் பெற்றதும், அவனுடன் வணிக மற்றும் அரசியல் தொடர்புகளுக்கான இடமாக இருந்த இயற்கைத் துறைமுகம்) ஆகிய இடங்களில் கிடைத்த பழங்கால நாணயங்கள், பழங்கால பாவனைப் பொருட்களை ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞர்கள், கிரேக்க, சீன, அரேபிய, கடார, யவன, சோழர் காலத்தினதும் அதற்கும் முந்திய காலத்தினதும் பொருட்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டிருந்தனர். அவை தொடர்பான குறிப்பேடுகள் சில யாழ்ப்பாண நூலகத்தில் இருந்ததைப் பல அறிஞர் பெருமக்கள் சொல்லியிருந்தனர். எரிக்கப் பட்ட யாழ்ப்பாண நூலகத்தில், வெளி நாட்டு அறிஞர்களால் எழுதப் பட்ட பல வரலாற்றுக் குறிப்புகளும் அடங்கும். ( 1974 ஆம் ஆண்டு உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் போது யாழ்ப்பாணத்தில் நடந்த வெறியாட்டத்தின் போது சிறப்பு மிக்க யாழ்ப்பாண நூலகம் எரிக்கப் பட்டது.)

    -கோகிலன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உள்ளீடுகளுக்கு நன்றி கோகிலன்.தமிழர்கள் மீதான வந்தேறிகள் முத்திரையின் மூலம் சோழ,பாண்டிய பேரரசு காலந்தொட்டே குத்தப்பட்டதும்,அக்காலமே மகாவம்சம் தொகுக்கப்பட்ட காலமாயும் இருப்பது இரண்டு வேறு வேறு தொடர்பற்ற நிகழ்வுகள் அல்ல.
      இன்றும் கூட தமிழக மக்கள் அந்த காலத்தைதான்,தமிழர்கள் ஈழத்தில் காலடி வைத்ததாய் நம்பும் வரலாற்று பிழையை கூச்சமின்றி செய்கிறார்கள். பள்ளிப்பாட புத்தகங்களில் வரலாற்றை காணும் இந்த பைத்தியக்காரத்தனமென்று மாறுமோ!

      Delete
    2. நன்றி ரகு,
      தமிழர் வரலாறு உள்ளது உள்ளபடி தெரியவரும்போது மக்கள் ஏற்றுக்கொள்வர். குமரிக் கண்டம் பற்றிய உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட்டால் ஓரளவுக்கு ஆதித் தமிழர் பற்றி அறிய முடியும்.

      நன்றியுடன்
      கோகிலன்

      Delete
  4. 1900 களில் வெள்ளையருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்ற போது, தமிழ் சமூகத்தின் தலைமை என்று கருதப்பட்டவர்கள் , ( பொன்னம்பலம், பொன் முத்துக்குமாரசாமி, பொன் இராமநாதன், செல்வநாயகம்) இன ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 1930களில் , வெள்ளையர் சிங்களவர்களுக்கு இழைத்த அநீதிக்காக பிரித்தானியாவில் குரல் கொடுத்துள்ளனர். ஒருவர் பிரித்தானிய அரசு வழங்கிய "சர் (SIR)" பட்டத்தைக் கூட துறந்தார். 1948களில் பிரித்தானியாவின் நாடு பிடிக்காரர் வெளியேறும்போது கூட தமிழ் சிங்கள அரசுகளைத் தனித் தனியாக ஏற்படுத்த முயன்றனர். தமிழ் தலைமை என்று கருதப்பட்டவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், ஒருங்கிணைந்த இலங்கை மட்டும் போதும் என்று மறுத்து விட்டனர். 1958 களில் சிங்கள இனவெறி ஆதிக்கம் மேலோங்கியது. பண்டார நாயக்கா (அதிகாரம் அற்ற) அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசியதும் சிங்கள இன வெறியனால் சுட்டுக் கொல்லப் பட்டார். 1960 தொடக்கம் 70 களில், தமிழரசுக் கட்சியின் செல்வநாயகமும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமிர்தலிங்கமும் மற்றும் இவர்களது ஆதரவாளர்களும் மேற்கொள்ளப் பட்ட அறவழி உரிமை கேட்பு நிகழ்வுகள், சிங்கள காடையர்களாலும் இனவெறியர்களாலும் வன்முறை கொண்டு ஒடுக்கப் பட்டன. தமிழர் விடுலைக் கூட்டணி தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று முதன்மை எதிர்க் கட்சியாக இலங்கைப் பாராளுமன்றில் அமர்ந்து தமிழர்களின் உரிமைக்காகப் போராடியதாகக் கருதப் பட்டது. வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சுதந்திர தன்னாட்சித் தமிழ்ஈழத்தைப் பிரகடனப் படுத்தினார் அமிர்தலிங்கம். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த தமிழ் இனம் அவருக்கு இரத்தத் திலகமிட்டு அவர் பின்னால் ஒன்று திரண்டது. தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் அன்றி, ஒட்டுமொத்த இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வல்லமை அவருக்குக் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்கு நயவஞ்சகம் இழைக்கப்பட்டது. ஜெயவர்த்தனா வின் நரித் தந்திரத்தால் அமிர்தலிங்கம் சிங்கள அடிவருடியானார். அதிகாரப் பரவலாக்கல் வேண்டி நடந்த பல போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப் பட்டன. அண்மைக் காலம் வரை, தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சிங்களவர்கள், பௌத்த பிக்குமார் கூட கொல்லப்பட்டனர். ( சந்திரிகா வின் கணவர் குமாரணதுங்க , மற்றும் மட்டக் களப்பில் ஒரு பௌத்த தேரர் )
    இந்த நிலையில், உரும்பிராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரன் என்ற படித்த இளைஞன் காவல் துறை (?) அதிகாரியைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்கிறான். கொந்தளித்துக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்திற்கு அவனது சாவு மேலும் வீறு கொடுக்கிறது. இளைய தலைமுறை உரிமைகளை வென்றெடுக்க ஆயுதப் போரை நம்பிக் களம் இறங்கியது.

    சிங்கள பௌத்த பேரினவாதிகள் எக்காலத்திலும் தமிழ்மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாய் வாழ விடப் போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தனிநாடு கோரிக்கை எழுப்பப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்க்கு பிறகு தேர்தலில் நின்றதும்,நின்று வென்ற பின் பதவிகளை துறக்காததும் வரலாற்றுத் தவறு. எந்த அமைப்பை மொத்தமாக ஏற்க் மறுத்து எதிர்த்துவிட துணிந்தோமோ அந்த அமைப்பிலேயே அங்கம் வகித்தது பைத்தியக்காரத்தனமே.மக்களின் எண்ணத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்த பின் அந்த பதவிகளை உதறி போராட்டங்களை தொடர்ந்திருக்க வேண்டும்.

      Delete
  5. தமிழர்களுக்கு நல்ல அரசியல் தலைமை கிடைக்கவில்லை.
    -கோகிலன்

    ReplyDelete