Saturday, March 31, 2012

கூடங்குளம் - அமுதசுரபியா ? ஆலகாலமா ?

கூடங்குளம் - இன்று தமிழகத்தில் மக்களை இருவேறு தளத்தில் சம பலத்துடன் நிறுத்தியிருக்கும் ஒரு விடயம். 

ஒரு புறம் மின்சாரம் வேண்டியும், இழந்த தம்  பொருளாதார நலன்களை மீட்டெடுக்க வேண்டியும் இந்திய அரசையும், விஞ்ஞானிகளையும், அறிவியலையும் நம்பி இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு சாரார்.

மறுபுறம் இருக்கும் தம் வாழ்வாதாரத்தை தக்கவைத்து கொள்ளவும், தங்கள் சந்ததிகளை கதிரியக்க பாதிப்பில் இருந்து காக்கவும், இறைவன் , இந்திய அரசு, அதன் உறுதிமொழிகள், விஞ்ஞானிகளின் அறிக்கைகள் என எல்லாத்தையும் மறுதலித்து இந்த திட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் மறு சாரார்.

ஒரு முன்னோட்டம் பார்த்துவிட்டு மேற்செல்லலாம்.


  • கூடங்குளம்: 1988 ஆம் ஆண்டு, 2 x 1000 MW கொள்ளளவு கொண்ட அணு உலை அமைக்க இந்திய ருசிய ஒப்பந்தம் 
  • கூடங்குளத்தை தெரிவு செய்ததற்காக முதல் எதிர்ப்பு பதியப்படுகிறது 
  • 1991 -ல் ருசிய கூட்டமைப்பு சிதறுண்டதால் ஏற்பட்ட அரசியல் / பொருளாதார நிலையற்ற தன்மை,NTBT (Nuclear Test Ban Treaty ) -யில் கையெழுத்து இடாத இந்தியாவிற்கு எதிரான Nuclear Suppliers Group மற்றும் அமெரிக்க நெருக்குதல் காரணமாய் ஒப்பந்தம் ஏற்பட்டு 9 ஆண்டுகள் கழித்து கட்டுமானப்பணி தொடங்குகிறது.
  • 2004 -ல் கூடங்குளத்தில் ஒரு சிறிய துறைமுகம் கனரக உபகரணங்களை கொண்டு வருவதற்காக அமைக்கப்படுகிறது.
  • மேலும் நான்கு உலைகள் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்டப்பணியாக செயல்படுத்த திட்டமிடப்படுகிறது.
  • சப்பானில் நடந்த புகுசிமா விபத்திற்கு பிறகு அணுஉலை எதிர்ப்பு பன்மடங்கு வேகமெடுக்கிறது.
  • இந்த அணுஉலையில் உலகின் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களும் / வழிமுறைகளும் இருப்பதாக உறுதி கூறப்படுகிறது.
  • இந்திய அணு உலைகளில் ஏற்பட்ட "முட்டாள்தனமான" விபத்துகளையும் / சுனாமி ஆபத்தையும் / அணு கழிவு மேலாண்மையில் உள்ள குறைபாட்டையும் / அணு உலையின் பாதுகாப்பு தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெறுகிறது.

கதிரியக்க பாதிப்பு என்பது தான் இதை எதிர்ப்பவர்களின் "போர் முழக்கம்" , சரி இந்த 'போர் முழக்கத்தை" அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது? "உலகின் நவீன பாதுகாப்பு வசதிகள் நிரம்ப நிறைந்த அதி பாதுகாப்பான ஒரே அணு உலை இது " என்ற விளக்கத்தின் மூலமாக . 

"அணு உலை பாதுகாப்பு என்பது அணு கதிர் வீச்சில் இருந்து காக்க கூடியது " என்று மிக எளிமையாக புரிந்துகொண்டால், மன்னிக்கவும் உங்களுக்கு அணு விஞ்ஞானம் தெரியவில்லை எனப் பொருள். உலை தான் பாதுகாப்பானது, உலைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதை முழுவதும் காத்து அதிலிருந்து கதிரியக்கம் வராமல் தடுக்க முடியும் என்பது வரை சரி (As it Designed ) ! ஆனால் இங்கு கதிரியக்கம் என்பது "அனுக்கழிவின்" மூலமாகவும் நிகழும் என்பதும், அதை முறையாக பாதுகாப்பது எத்தனை செலவு மிகுந்த காரியம் என்பதும், அத்தகைய அதிமுக்கிய திட்டமிடல் நமது அரசாங்கத்திடம் இருக்கிறதா என்பதும் எதிர் தரப்பினரின் நியாமான வாதம்! இது வரை அரசோ / விஞ்ஞானிகளோ இதற்கு சரியான / மழுப்பல் அற்ற நேரடி பதில் தரவில்லை. இந்திய அணு உலைகளின் இது நாள் வரையான கழிவுகள் எங்கு ? எவ்வாறு ? பாதுக்காப்பாக சேமிக்க படுகின்றன என்பதை "தேச பாதுகாப்பு" கருதி வெளியிட மறுக்கிறது அரசாங்கம். சேமிக்கப்படுகிறதா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது! 

ஒவ்வொரு அணு உலையை சுற்றியுள்ள மக்களின் கதிர் வீச்சு வீரியத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வெளியிட வேண்டுமென்பது அணுஉலை அமைப்பதற்க்கான முன் நிபந்தனைகளில் ஒன்று. இந்தியாவில் அத்தகைய கணக்கெடுப்புகள் நிகழுகின்றன என்றாலும் அதன் முடிவுகள் வெளிப்படையாய் அறிவிக்கப்படுவதில்லை! மீண்டும் "தேச பாதுகாப்பு" முன்னிறுத்தப்படுகிறது.

சரி இபோதுதான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதே, அந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் அணுஉலைகளை பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி வழங்க வேண்டுமே! (தவறெனில் குறிக்கவும்) இது சரியெனில் கூடங்குளம் அணுஉலையை ஏன் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுக்கு உட்படுத்தி மிக பாதுகாப்பானது"என்ற சான்றிதழ்  வாங்கித் தரக்கூடாது? உண்ணாவிரத பந்தலில் படுத்திருக்கும் பாமரனின் கேள்வி இது. அரசாங்கம் இன்னும் அவனை பாமரனாகவே எண்ணுவதுதான் பாமரத்தனதத்தின் உச்சம்.

இப்படி கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் "தேச பாதுகாப்பு கருதி" என்ற ஒற்றை பதிலை சுமந்து படி முதுகு திருப்பிக்கொள்ளும் அரசாங்கம், சட்டப்பக்கங்களில் தேசப்பாதுகாப்பை உறுதி செய்தவிட்டதாக  கர்வப்பட்டுக்கொள்கிறது .

சரி, எதிர்ப்பவர்கள் கிடக்கட்டும், ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் ? அன்றாடம் வாசலில் சிதறி கிடக்கும்  தினசரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் வரிகளை படித்துவிட்டு மற்றவர்க்கு அதை தங்கள் அறிவுசீவித்தனமென ஊரெல்லாம் பறையடிக்கிறார்கள். 

ஆம் நாளிதழ்களிலும் / மூன்றாம் தர அரசியல்வாதிகளின் நான்காம் தர அறிக்கைகளிலும், மின்னொளி இழந்து கிடக்கும் தங்கள் தேவைகளை தீர்க்கும் அமுதசுரபி வரிகளை தேடிப்பிடித்து படித்து விட்டு, சிந்திக்க மறுத்து மூளைக்கு விடுப்பளித்து "அறிவியலை நம்புங்கள்" என்று ஆரூடம் கூறுகிறார்கள்! 

"அறிவியலை நம்பலாம் ஆனால் அரசியல்வாதிகளின் அறிவியலையும், அறிவியல்வாதிகளின் அரசியலையும் நம்புவது இயலாது' என்பதுதான் எதிர்ப்பாளர்களின் நிலையான நிலையாக இருக்கிறது. 

அரசியல் சதியில் வியர்வை குளியல் குளித்த மக்கள் சிலர் தரவுகளே இல்லாமல் அணுஉலையை ஆதரிக்க தொடங்கிவிட்டு, பின்னர் விவாத தருணங்களில் சப்பைக்கட்டு கட்டவேண்டியதற்காக, வழியும் வியர்வை துளிகளுக்காக எதிர்த்து போராடுபவர்களை சபித்தபடி நாளிதழ்களில் செய்திகள் தேடுகிறார்கள். இப்போதும் வழியும் வேர்வைகளில் தான் அவர்கள் கவனம் முழுக்க! 

எதிர்ப்பாளர்களை நியாயமாக எதிர்கொள்ள மறுக்கும் அரசாங்கம், அவர்கள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது! வெளிநாட்டு நிதியுதவி , அமெரிக்க ஆதரவு, மிசனரிகள் சதிவேலை, நக்சலைட்டுகள் ஊடுருவல் என ஒவ்வொன்றாய்.  ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கம் சாட்சிகளை கேட்டால் பல்லிளிக்கிறது.
  • வெளிநாட்டு நிதி வந்ததாக தடயங்கள் காணோம்!
  • ருசிய உலை என்பதால் எதிர்க்க அமெரிக்க ஒத்தாசை என்கிறார்கள் பனிப்போர் காலத்து மக்கள் சிலர். உலகம் மாறிவிட்டது என இவர்களுக்கு யார் சொல்லுவதோ? 123-ஒப்பந்தத்தை வைத்து நாளை அமெரிக்க இங்கு அணு உலை திறக்காமல் 'நாக்கா வலிக்கும்" என்று யோசிக்க மறந்து விடுகிறார்கள்.
  • மிசனரிகள் சதியாம், போராடுபவர்களில் பெருவாரி "புட்டுக்கோல்களாய்" இருப்பதால் இந்த குற்றச்சாட்டு! அதனால் மிசனரிகளுக்கு என்ன ஆதாயம் என்பது, என் சிறுமூளை, பெருமூளை என்ற இரண்டிற்கும் விளங்காத புதிர்.
  • நக்சலைட்டுகள் உட்புகுந்து விட்டார்களாம்! எனக்கென்னவோ இங்கு நக்சலைட்டுகளை உருவாக்கும் முயற்சியாகவே இது படுகிறது.

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னாலாவது கேட்பவர்கள் பின்னாளில் நம்புதல் கூடும்.

காக்கிச்சட்டை ஆட்சிக்கு உறுதுணை தானே அன்றி அதுவே ஆட்சி முறை அல்ல என்பதை இந்த "அரசியல் அறிவிலிகள்" அறிவது எப்போதோ?

மேலதிக ஆச்சரியம் என்னவென்றால்

  • ராஜிவ்காந்தி முன்னெடுத்த திட்டம் என்பதற்காக காங்கிரசும், 
  • ருசியியாவுக்காக கம்யுனிசிட்டுகளும் , 
  • மிசனரி ஒத்தாசை தருகிறது என்ற குற்றசாட்டிற்காக  இந்துத்துவ முலாம் பூசிய கட்சிகளும் , 
  • மத்திய அரசெனும் பாம்பு நிழலில் ஒளிந்து வாழவேண்டிய கட்டாயத்தால் திமுக'வும், 
  • தமிழக மின்வாரியத்தின் நிர்வாக /மின்விநியோக  சீர்கேட்டை மறைப்பதற்காக 'சங்கரன்கோவில்' இடைதேர்தல் வரை பொட்டிக்குள் பூட்டி வைத்திருந்த "திராணியை" திறந்து விட்ட ஜெயலலிதாவும் 
என அனைவரும் கூடங்குளம் எனும் கடலில், அணுஉலை என்ற மலையை வைத்து ஆதரவு என்ற பாம்பின் தலையை பிடித்திழுக்க,

  • வைகோ என்ற ஒரே ஒரு அரசியல் முகமும், 
  • உதயகுமார் என்ற தலைமையில் ஒருங்கினைந்த கூட்டமும் 
மறுபக்கம் எதிர்ப்பு என்ற பாம்பு வாலை பிடித்துக்கொண்டு  கடைகிறார்கள்.

ஒழுகும் வியர்வையை துடைத்தபடி "அமுதக்கலசம் கிடைத்துவிடும், மரணமில்லா 'மின்சார' பெருவாழ்வு வாய்த்துவிடும்" என்று வாய்பிளந்து நிற்கிறது மக்கள் கூட்டம். 

அமுதம் வரும் முன்பாக ஆலகாலம் வந்தாதாக ஆதி கதையொன்று உண்டு! அதை பருக அன்று இருந்தானாம் ஒரு தேவன்!

அந்த தேவன் மீண்டும் வருவாரோ ................................................யாமறியேன் பராபரமே !


-ரகு

அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய "கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்" என்ற பொத்தகத்தை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

6 comments:

  1. மிக நல்ல கட்டுரை , மிக்க மகிழ்ச்சி , எழுத்து நடை என்னை ஈர்த்தது , நல்ல ஆழமான கருத்தாக்கங்கள் , மிக யோசித்து, ஒவ்வுறு வார்த்தையும் பார்த்து பார்த்து எழுதியது போல் உள்ளது . இன்னும் நீ நிறைய எழுத வேண்டும் , அடுத்த உன் கட்டுரை நான் அனுப்பிய வறுமை கோடு பற்றியதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி .

    ReplyDelete
  2. Splitting these Fantastic Lines, for effect..

    * ராஜிவ்காந்தி முன்னெடுத்த திட்டம் என்பதற்காகக் காங்கிரசும்
    * ருசியியாவுக்காகக் கம்யுனிசிட்டுகளும்
    * மிசனரி ஒத்தாசை தருகிறது என்ற குற்றசாட்டிற்காக இந்துத்துவ கட்சிகளும்
    * மத்திய அரசெனும் பாம்பு நிழலில் வாழவேண்டிய கட்டாயத்தால் திமுக'வும்
    * தமிழக மின் சீர்கேட்டை மறைப்பதற்காக 'சங்கரன்கோவில்' இடைதேர்தல் வரை பொட்டிக்குள் பூட்டி வைத்திருந்த "திராணியைத்" திறந்து விட்ட ஜெயலலிதாவும்

    ** என அனைவரும் கூடங்குளம் எனும் கடலில்,
    ** அணுஉலை என்ற மலையை வைத்து
    ** ஆதரவு என்ற பாம்பின் தலையைப் பிடித்திழுக்க,

    * வைகோ என்ற ஒரே ஒரு அரசியல் முகமும்,
    * உதயகுமார் என்ற தலைமையில் ஒருங்கினைந்த கூட்டமும்
    * மறுபக்கம் எதிர்ப்பு என்ற பாம்பு வாலைப் பிடித்துக்கொண்டு கடைகிறார்கள்

    "அமுத கலசம் கிடைத்துவிடும், மரணமில்லா 'மின்சாரப்' பெருவாழ்வு வாய்த்துவிடும்" என்று வாய் பிளந்து நிற்கிறது மக்கள் கூட்டம்.
    அமுதம் வரும் முன்பாக ஆலகாலம் வந்தாதாக ஆதிக் கதையொன்று உண்டு!

    ReplyDelete
  3. //அதைப் பருக அன்று இருந்தானாம் ஒரு தேவன்!//

    விடமுண்ட கருணைத் தேவனையும்...
    கோயிலென்னும் கூட்டில் அடைத்து,
    பிரதோஷ வழிபாடு செய்து அமுக்கி விட்டார்களாம் தேவர்கள்!

    கூடங்குளத்தில் விடமுண்ணப் போகும் கண்டர்கள் = கலாம்-களோ?
    அவர்களைக் கூட்டில் அடைத்துக் கொக்கரிக்கப் போவது = காங்கிரசோ?

    விடமுண்ட கண்டன் திருமகனைத் தங்கள் "சேனாதிபதி" என்று பொய்கட்டி..
    அண்டமெல்லாம் தங்களுக்கே ஆதரவு
    என்று காட்டிக் கொள்ளும் அற்பத்தனங்கள் அழியும் நாள் எந்த நாளோ! அந்தக் கந்த நாளோ!

    வைகோ எனும் "அசுரன்" வாழி!

    ReplyDelete
  4. ட்விட்டர் கதவு வழியாக இங்கு நுழைகிறேன்.

    இணையத்தில் கொட்டிக் கிடக்கும் கூடங்குளம் பற்றிய பதிவுகளில் இந்தப் பதிவு தனித்துத் தெரிகிறது - மொழி நடையால்.

    ReplyDelete