Thursday, July 19, 2012

கோவை - சென்னை : கவுஹாத்தி தொடர்வண்டிப் பயணம்

ஊரோடிய கதைகளில் சொன்னது போல் "அலுவல்கள் சாராத என் பயணங்கள் எதுவும் பயணிக்கத் தொடங்கும் கடைசி நொடி வரை நிச்சயமற்றதே" என்ற மெய்வாக்கை பொய்யாக்கியே தீருவது என்ற பெருமுயற்சியோடு, ஒரு வியாழக்கிழமை IRCTC Tatkal பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பல் விளக்கியபடி கணினி முன்னால் அமர்ந்திருந்தேன். IRCTC "cache" மூலமே பெரிதும் இயங்குவதால் எல்லாப் பக்கங்களையும் முன்னமே ஒரு எட்டு எட்டிப்பார்த்து  வைத்திருந்தேன். வெள்ளிக்கிழமை கோவை பயணம். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வது தான் பெரிதும் பிடிக்கும் என்றாலும், மனது இப்போதெல்லாம் "சௌகரியம்" பார்க்க தொடங்கிவிடுகிறது. புறச் சூழலை அலட்சியப்படுத்திவிட்டு வாழ்வதென்பது "பேச்சிலர்" வாழ்வின் இறுதிகாலத்தில் முடிந்தேவிடுகிறது.

அறைத் தோழன் தனக்கும் சேர்ந்து முன்பதிவு செய்யும் படி கேட்டான்! விதி ... இல்லையில்லை..."IRCTC வலியது"...பயணச்சீட்டு கிடைக்கவில்லை. சரி "முன்பதிவற்ற பெட்டியில்" பயணிக்கலாம் என்றால் நண்பன் மறுத்துவிட்டான். நீ போடா, இந்தா "ரிட்டர்ன் டிக்கெட்" என்று மூன்று மாதத்திற்கு முன்னர் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டு ஒன்றை மின்னஞ்சல் செய்தான். பயணச்சீட்டை பார்த்தேன்  "கவுஹாத்தி  எக்ஸ்ப்ரெஸ்" என்றிருந்தது.
****************
ஞாயிறு இரவு, அரை மணி முன்னதாகவே வந்துவிட்டேன் ஏனென்றால், இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி தமிழகம்,ஆந்திரம்,ஒரிசா,பீகார், மேற்குவங்கம் வழியாக அசாம் தலைநகர் "கவுஹாத்தி" வரை செல்லும் வண்டி. கோவையில் பத்து நிமிடம் தான் நிற்கும். அதை விட்டுவிட்டால் பிறகு சேரனில் தொங்கிக்கொண்டு  போகவேண்டும்.

ஒரு தொடர்வண்டி முழுக்கவே "முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்" இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது கவுஹாத்தி விரைவு வண்டி. குளிர்பதன வசதி செய்யப்பட்ட பெட்டிகள் தவிர மற்ற அனைத்திலும் நிற்கக் கூட இடமில்லாத அளவில்லாத கூட்டம். கோவை - சென்னை முன்பதிவு செய்தவர்களுக்கு பெரும்பாலும் S11 & S12 பெட்டிகள் தான் ஒதுக்கப்பட்டிருந்தது.எது எந்த பெட்டியென்று தெரியவேயில்லை, ஒரு பெட்டியில் கூட அடையாள தட்டிகள் கிடையாது. ஒருவழியாக கண்டுபிடித்து ஏறி எனக்கான இருக்கையை அடைந்த பொழுது 8 பேர் இருக்க வேண்டிய ஒரு கூபேயில் கிட்டத்தட்ட 25 பேர் இருந்தார்கள். அதிகம் சிரமப்பட்டது பெண்கள் தான்.  தமக்கான இருக்கைகளை யாசகமாக கேட்கக்கூட யோசித்து கொண்டிருந்தார்கள். ரயில் கிளம்பிவிட்டிருந்தது, நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அவர்கள் பாவமாய் அமர்ந்து கொண்டிருந்தார்கள். வண்டி முழுக்க நிரம்பியிருந்த அவர்களின் (வடமாநிலத்தவர்கள்) முகங்களும் ஊர் போய் சேருவோமா என்ற குழப்ப ரேகை ஓடியிருந்தது. ஒருவழியாக வாக்குவாதங்களுக்கும், RPF இடையீட்டிற்கு பிறகு எங்களுக்கான இருக்கை கிடைத்தது. ஆனால் அவர்கள் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தார்கள்.

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இங்கிருந்து கவுஹாத்தி வரை ரெயில் இயக்கப்படுகிறது. இதை விட்டுவிட்டால், கேரளாவில் கட்டட வேலை பார்க்க வந்து இறங்கியிருக்கும் ஒரிசா, பீகார், மேற்குவங்க இளைஞர்களுக்கும், பெரிய உணவகங்களில் "எச்சில் தட்டம்" சுமக்கும் கொடுமைக்காக வந்திருக்கும் அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கும் / யுவதிகளுக்கும் வேறு வழியே கிடையாது. அவர்கள் சென்னை வந்து வேறு ஏதேனும் இரயிலில் இப்படி தொங்கிக்கொண்டு போகவேண்டும். இந்த இரயிலில் இப்படி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி பயணிப்பவர்கள் எல்லோரும் "ஓபன் டிக்கெட்" பயணிகள் அல்ல, பாதிப்பேர் "காத்திருப்போர் பட்டியல்" பயணிகள். இந்த  பயணச்சீட்டு வைத்திருப்போர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க இரயில்வே சட்டம் இடமளிக்கிறது.

கணக்கில்லாமல் பயணச்சீட்டு வழங்குவதும், இத்தனை பயணிகள் இருந்தும் இந்த ரெயிலை வாரமிருமுறை இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ரயில்வேத்துறை தான் குற்றம் சுமத்தப்பட வேண்டியது. நமக்கு யாரேனும் தீங்கிழைக்கும் போது அவர்கள் மீதான நியாயமான கோபத்திற்கு முன்னதாக "  We should put Ourselves in Their Shoes". 

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்கு போகும் இவர்கள் கிடைக்கும் விடுமுறையில் சரி பாதி நாட்களை பயணத்துக்கே கொடுத்து விட்டு, மீதி நாட்களில் உறவுகளை கண்டு / உறவு கொண்டு திரும்பி வந்துவிடுகிறார்கள். மனைவிக்கு என்ன, பெற்ற தாய்க்கு கூட மகனின் முகம் மறந்து போகும் பொல்லாத சூழல் அவர்களது. இந்த பயணம் கூட மிக ஆபத்தானது, பணம் எடுத்து செல்வது மிக மிக கடினம். அங்கங்கு திடீரென இரயில் நிறுத்தப்பட்டு களவாடுவது சாதாரண நிகழ்வு.  குளிர்பதன பெட்டிகளில் கொள்ளை நடக்கும் வரை இதெல்லாம் ஊடகங்களில் வராது. 

எந்த உழைப்பிற்காக இப்படி சொந்த நாட்டிலயே ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை வந்து பொருளீட்டுகிறார்களோ அதை முறையாக கொண்டு  செல்வதே பெரும்பாடு. வங்கிகளும் - Core Banking முறைமைகளும் இப்போதுதான் இவர்களுக்கு அறிமுகமாகிறது. இந்த ரெயிலில் பயணிப்பது மிகப்பெரிய தண்டனை என்று அண்ணன் @TPKD_ கேள்வியுற்றதாக சொன்னார். அது முற்றிலும் உண்மை . இந்த கட்டுரை எழுதிமுடிக்கும் தருவாயில் அந்த ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து கவுஹாத்தி வரை ஒரு பயணம் போகும் ஆசை துளிர்விடுகிறது. பார்க்கலாம். (நான் சொல்லாத / அறியாத இவர்களின் சோகங்கள்  ஏராளம்) 

சண்டை போட்டு எனதிருக்கையில் இருந்து இவர்களை எழுப்பி  நிற்கவைத்துவிட்டு, எனக்கான இருக்கையில் கால் நீட்டி, கம்பளி போர்த்திப் படுத்துவிட்டு, சகபயணியிடம் இவர்களின் சோகப் பயணங்களை பற்றி சிலாகித்துவிட்டு, இவர்களில் திருடர்கள் யாரும் இருந்து என் உடைமைகளை திருடிவிடக்கூடாது என்பதில் கருத்தும் வைத்துவிட்டு, எந்த குற்ற உணர்வும் அற்று உறங்கிப்போனேன். 

என்னால் முடிந்ததெல்லாம் வாழ்கையை தேற்ற முடியாத இவர்களை பற்றி ஒரு பதிவு தேற்ற முடிந்தது தான். 

- வெட்கத்துடன் ரகு   

6 comments:

  1. கௌஹாத்தியில் சென்றால் ஒரு முறை சபர்மதி விரைவு வண்டியிலும் சென்று பாருங்கள் (வாரணாசி - அகமதாபாத்). பல்வேறு தரப்பட்ட மனிதர்களை பார்க்கலாம் (நடுவில் கோத்ராவும் உண்டு )

    ReplyDelete
    Replies
    1. இவ்வகையான எல்லா பயணங்களையும் செய்ய விருப்பமே. பல்வேறு நடைமுறை சிக்கல்களால் முடியவில்லை. என்றாலும் முயற்சி முன்னெடுக்க விருப்பமே

      Delete
  2. நல்ல பதிவு...இந்த இரயில்வே பணக்காரர்களுக்காக பல்லக்கு தூக்கும் துறை..சாமானியர்களுக்கு தூங்கும் துறை..

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி! எப்பொழுதுமே வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டு இயங்ககூடது என்பதில் இரயில்வே சற்று அக்கறை காட்ட வேண்டும்

      Delete
  3. டேய் அண்ணா.. நானும் இதே வேலைய செய்வேன் டா.. unreserved தான் முக்கால்வாசி.. அதுவும் எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா ஒதுங்கி தூங்கிடாத பகல் வேளைகளில்.. இப்ப கடைசி தடவையா சென்னை போக மட்டும் first class. வேற வழி இல்ல.. பாதுகாப்பின் இன்மை வரும் பொழுது சுயநலம் தனது முதல் சீட்டை நீட்டுகிறது..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதுவே விருப்பமானது! அதிகம் பேசமாட்டேன்! அதிகம் கவனிப்பேன்! சூரத்தில் இருந்து வரும் பொழுது ஒவ்வொரு முறையும் ஷோரனூர் வரை முன்பதிவு செய்யாத பெட்டிகளில் விரும்பி வருவேன். அருமையான பாதை. இரவு பன்னிரண்டு மணிக்கு கிளம்பினால் மறுநாள் காலை மூன்று மணிக்கு, இருபத்தேழு மணி நேர பயணம். மறக்க முடியா பாடங்களை தரும்.

      Delete