Friday, October 12, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -5

களைப்பாக உறங்கப் போகும் அத்தனை இரவுகளும் எனக்கு விரைவாகவே விடிந்து கொள்ளும்! அதற்கு பின் உறங்கப்பிடிக்காது! அன்றும் அப்படித்தான்! தூக்கம் என்பது உண்மையில் ஒரு தவம். எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை அது. 


காலை உணவு முடித்து அறையை காலி செய்தோம். அழகான வரவேற்பாளினியின் கைகளில் ஆங்காங்கே நக கீறல்களும், சில காயங்களும். கவனிக்காதது போல நகர்ந்து விடுவது தான் நாகரிகம்.

எங்கு போவது என்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எப்போதும் இப்படித்தான், கடைசி நிமிடம் வரை நிச்சயமற்ற நிகழ்வுகள் தான் எங்கள் தனித்துவமே. எத்தனை திட்டமிடல்களோடு தொடங்கினாலும் வாழ்வின் எல்லா நிமிடங்களும் இப்படி நிச்சியமற்றவைதானே.சர்ச்சு, கோட்டை என்ற யோசனைகளை புறந்தள்ளி மீண்டும் கடற்கரை தான் முன்னின்றது. கடல், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத அதிசயம். கடலுக்கு நாம் கொஞ்சமே கொஞ்சம் உதவி செய்தால் போதும், நம்மை குழந்தையாக்கிவிடும் மந்திரம் தெரியும் அதற்கு. 

இம்முறை நாங்கள் தேர்ந்தெடுத்த கடற்கரை "பைனா கடற்கரை". மணி பகல் பன்னிரண்டு. வெளியூர் வாசிகள் யாருமே கிடையாது, ஒரு சில சிறுவர்கள் கடலாடி கொண்டிருந்தார்கள். இரண்டு கம்புகளுக்கு மேல் சாய்த்துவைக்கப்பட்டிருந்த தென்னை ஓலை பின்னலுக்கு அடியில் அமர்ந்து  தன் மனைவியோ / காதலியோ / யாரோ ஒரு பெண்ணுடன் கடல் கரையில் கடலை  போட்டுகொண்டிருந்த ஒரே ஒரு "Lifegaurd" மாத்திரம் அந்த சிறுவர்களை கவனித்து கொண்டு இருந்தான். கடற்கரையை இத்தனை தனிமையாக நான் பருகியது கிடையாது. அதுவும் இப்படி ஒரு வெயிலில். வெயில், கடலைப்போலவே எனக்கு மிக பிடித்த சமாச்சாரம். சுடுமணலில் செருப்பற்று நடக்கையில் அனல் பொறுக்கும் பாதங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக சிறுவயதில் நினைத்து பழகிய 'வானம் பார்த்த பூமிக்காரன்'  நான். அலைகடலும் சுடுமணலும் என்னை சிறுவனாக்கிட சுடுமணலில் வெறுங்காலில் நடைபலகிடச் செய்தது. கடல் என்னை குடிக்க ஆரம்பித்துவிட்டது. இனி நான் குளிக்க வேண்டியதுதான் பாக்கி.

திட்டமிடல் அற்ற குளியல், நீர் விளையாட்டு, ஒவ்வொரு அலைக்கும் "ரிதமிக்காக" குதிக்கும் அந்த விளையாட்டு கொஞ்சம் சூடு பிடித்து விட்டதும் மனம் குழந்தையாகிப்போனது. அந்த சிறுவர்களோடு சேர்ந்து நாங்களும் விளையாடினோம். மண் அள்ளி உருண்டையாக்கி ஒருவருக்கொருவர் வீசிக்கொண்டோம் ஈரமணலெடுத்து உடம்பெல்லாம் பூசிக்கொண்டோம். மணலும் உள்ளாடையும்  மட்டும் அணிந்தபடி காட்டுவாசி நடனம் ஆடி அதி மனிதனாகவே ஆகிப்போனோம் யாருமற்ற அந்த தனிமை சூழ் கடல்வெளி வெயிலில். தனிமை ஆனந்தமயமானது, நண்பர்களுடன் இருக்கையில் பேரானந்தமாகும் இதே தனிமை காதலியுடன் இருக்கையில் பேரின்பமாகிறது.

கடற்கரைக்கு சற்று தள்ளி சாலையோரம் நன்னீர் தொட்டி ஒன்று இருக்கிறது, அதிலிருந்து குழாயில் வரும் தண்ணீரில் "ஓபன் ஷவர்" குளித்துகொள்ளலாம். நல்ல ஏற்பாடு. நம்மூர் கடற்கரையில் இதெல்லாம் ஏன் இல்லை? 

பசி... பசி... அப்படியொரு பசி... ஊர் திரும்பும் வழியில் கோவா எல்லையில் ஒரு உணவகத்தில் அசத்தல் சாப்பாடு. பயணத்திட்டத்தில் சின்னதொரு பெரிய மாறுதல். கோவாவில் இருந்து தார்வாட், ஹூப்ளி, தேவ்னக்ரே, சித்ரதுர்கா பெங்களூரு, சேலம், அவினாசி, அன்னூர், கோவை என்ற வழயில் செல்வதென. 200 கிலோமீட்டர் அதிகம் தான்,ஆனாலும் இதுதான் ஓட்டுவதற்கு வசதி. மாலை நாலு மணிக்கு கிளம்பிய வண்டி தார்வாட் வரும் போது மணி ஆறு. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஊடே போடப்பட்டுக்கொண்டிருந்த புத்தம் புது சாலை வழியான பயணம். அருமையான காடு, இன்னும் கொஞ்ச நாளில் கற்பழித்துவிடுவார்கள். மெல்ல கர்நாடக எல்லை தொட்டதும் ஆயிரக்கணக்கில் சுமையுந்துகள். ஆம் உண்மையில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். எல்லாமே சுரங்கங்கள் கனிமம் அள்ளுபவை. "காடுகள் இரும்பு கம்பிகளாக மாறிய கதைகள் கேட்டு தூங்கச் செல்லலாம் நம் அடுத்த தலைமுறை.

தார்வாடில் புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பிடித்ததும் "இரத்தக்கண்ணீர்" படம் பார்க்க ஆரம்பித்தோம். எனக்கு அந்தப்படம் அதுதான் முதல் முறை. ஜீவகாருண்யத்தை கேலி பேசும் காட்சி வரை அலுக்கவே இல்லை. அனுபவங்களையும் அறிமுகங்களையும் தராத பயணங்கள் உயிரோட்டமற்றவை. ஊர்களை தொடாமல் நீளும் தங்க நாற்கர சாலைகள் எல்லாமே அப்படித்தான். மலைகளுக்கு நடுவே நீண்டு கொண்டே செல்லும் இந்த சாலைகள் அரிதாகவே ஊர்களை தொடுகின்றன.

அவினாசியில் டீ குடித்தபடி பயனச்செலவுகளை பைசல் செய்கையில் மணி காலை ஏழு. வழமை போல கணக்குகள் நேர்படவில்லை. யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? 

எல்லா நட்டங்களையும் "அனுபவம்" நேர்படுத்திவிடும் என்பது தானே வாழ்க்கை பயணத்தின் சாரமே! 

-முற்றும்

முதல் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௧(1)
இரண்டாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௨(2)
மூன்றாம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௩(3)
நான்காம் பாகம் -ஊரோடிய கதைகள் - கோவா ௪ (4)

1 comment:

  1. அழகான பதிவு !!
    //எத்தனை திட்டமிடல்களோடு தொடங்கினாலும் வாழ்வின் எல்லா நிமிடங்களும் இப்படி நிச்சியமற்றவைதானே//
    //சுடுமணலில் செருப்பற்று நடக்கையில் அனல் பொறுக்கும் பாதங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவதாக// - அருமை.

    கொஞ்சம் எழுத்து பிழை கவனியுங்கள்.. நல்ல உணவின் நடுவில் சின்ன கல் இருக்க வேண்டாமே? :-)

    ReplyDelete