Monday, November 19, 2012

வலை தள வலை - 1


*பிரபல பாடகியின் புகாரின் பேரில் பிரபல தமிழ் ட்விட்டர் கைது.
*கார்த்தி சிதம்பரத்தின் புகாரின் பேரில் ட்விட்டர் பயனீட்டாளர் கைது.
*பால்தாக்ரே இறப்பு பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரண்டு பெண்கள் கைதாகி பிணையில் விடுதலை.


 

செய்திகளில் அதிகம் அடிபடுகிறது டிவிட்டரும் பேஸ்புக்கும். இணைய சூழல் பற்றி அறியாத தின நாளிதழ்களின் நீள-அகலங்களில் உலகை எடை போடும் எவரும் ட்விட்டரை  / பேஸ்புக்கை குசும்புக்காரர்களின் / விட்டேத்திகளின் கடைசி புகலிடமாக புரிந்துகொள்கிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லை. 


உலகின் ஒவ்வொரு அரசாங்கமும் ட்விட்டரை/பேஸ்புக்கை ஒரு எதிர்கட்சியை போல பார்க்க  தொடங்கியிருக்கும் அதே வேளை, ஊடகங்கள் ட்விட்டரை/பேஸ்புக்கை தமக்கு எதிரான செயல்பாடாக பார்க்கும் காலச்சூழல் வளர்ந்துவருகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சமூக வலைதளங்களும் ஊடகங்கள் தான், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கட்டற்ற ஊடகங்கள். இங்கு முறையாக பயின்று, நாகரிக மொழி பேசி, தணிக்கை செய்யப்பட்டு வெளிவரும் தகவல்கள் கிடையாது. இந்த ஊடகங்களின் செய்தியாளன் சாதாரணன், இந்த ஊடகங்களின் மொழி என்பது வழக்கு (அ) வட்டார மொழி. அதனால் இதன் வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்பதை ஊடகங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. உதாரணமாக ட்விட்டர் வந்த பிறகு நாளிதழ் படிக்க, தொலைக்காட்சி பார்க்க என நான் செலவிட்ட நேரத்தில் இப்போது பத்தில் ஒரு பங்கை கூட அதற்காக செலவழிப்பதில்லை. எல்லா செய்திகளும் இங்கு உடனுக்குடன் கிடைப்பதோடு அந்த செய்தி சார்ந்த பல்வேறு பரிமானங்கள், பல்வேறு தரப்பினரின் புரிதல்கள், மூன்றாம்/நான்காம்/ஐந்தாம் கோண பார்வைகள் போன்றவை இங்கு கிடைக்கிறது. நாளிதழ்கள் / தொலைகாட்சிகளில் இது சாத்தியமில்லை.  பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்க பட்ட "சமூக வலைதளங்கள்" அதன் படைப்பின் நோக்கத்தையும் தாண்டி    செயலாற்றுவதுதான் இப்போது பிரச்சனைக்கு உள்ளா(க்)கி இருக்கிறது. 


இந்த சமூக வலைதளங்கள் மூலமாக ஒத்த கருத்தில்லாத வேறு வேறு துறை சார்ந்த வெவ்வேறு இடங்களில் வாழும் வெவ்வேறு காலச்சூழலில் வளர்த்தெடுக்கப்பட்ட வெவ்வேறு வகையான மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பொதுவான சேதி பற்றி பேசி / பகிர்ந்து / உதவி புரிந்து பின்னர் பிரிந்து சென்றுவிடலாம்... பேஸ்புக் முகம் தெரிந்த நண்பர்கள் பேசிக்கொள்ளும் இடமாகவும் ட்விட்டர் முகம் தெரியாதவர்கள் உரையாடும் இடமாகவும் இருக்கிறது. 

கருத்துகளை பகிரும் இந்த ஊடகங்கள் ஆட்சியாளர்களுக்கு சவாலாகவும் ஊடகங்களுக்கு போட்டியாகவும் விளங்குகிறது. இந்த தேசத்தின் எல்லா டீக்கடையிலும் எல்லா நாளும் குறிப்பாக காலை வேளையில் ஏதேனும் சமீபத்திய அரசியல் நிகழ்வு ஒன்று அலசப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. மக்கள் கருத்துகளை பரிமாறி பின்பு தத்தமது வேலைகளை பார்க்க களைந்து சென்று விடுகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் களைந்து செல்வது என்பதே கிடையாது. ஒவ்வொரு நிகழ்வும் அலசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த குறிப்பிட்ட வியம் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த "உயிர்பித்து" வைத்திருக்கும் செயலானது இதுநாள் வரையில் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஊடகங்கள் விரும்பினால் காலணா பெறாத செய்தியை கூட மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவார்கள். பேரம் படிந்து விட்டால் மிகப்பெரிய குற்ற செய்கையை கூட "ஜஸ்ட் லைக் தட்" மறக்கடிக்க செய்துவிடுவார்கள். 

மக்களாட்சியின் நான்காம் தூணான இந்த "ஊடகங்கள்" தான் நாட்டை சீரழிப்பதில் இன்று முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அதில் தவறு இருக்க முடியாது. மக்களுக்கு என்ன மாதிரியான செய்தி சென்றடைய வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம் மக்களாட்சியின் குரல்வளையில் மிதிப்பதே இந்த நான்காம் தூண்தான். அந்த ஊடகங்களின் பிரம்மாஸ்திரமான இந்த "உயிர்ப்பிக்கும்/மறக்கடிக்கும்" சக்தியை மழுங்கடிக்க செய்யும் விதமாக சமூக வலைதளங்கள் செயல்படுவதால் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் ட்விட்டர் / பேஸ்புக்கை எதிரியாகவே பாவிக்கின்றன. இந்த சமூக ஊடகங்களில் ஏதேனும் சிறு தவறு நிகழ்ந்து விட்டால் போதும் "ஊதிப் பெருசாக்கி" விடுகிறார்கள். விளைவு சாதாரண மக்களுக்கு "சமூக வலைதளங்கள் " போக்கிரிகளின் கூடாரமாக தெரிகிறது.


ஊடகங்கள் கூட்டாக செய்யும் எந்த மோசடியும் இப்போது மக்களால் அதுவும் இளைய சமுதாயத்தால் "சமூக வலைத்தளங்கள்" மூலமாக அப்போதைக்கு அப்போதே அம்பலமாக்க படுகிறது. விளைவு ஊடக கோபம் அதிகரித்து இணைய பெருவெளியில் நடக்கும் தவறுகளை  பெரிதுபடுத்தி ஆட்சியாளர்கள் / அதிகாரிகள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் தனித்தன்மையான "கட்டற்ற சுதந்திரம்" மீது கட்டுப்பாடுகள் விதிக்க பெருமுயற்சி செய்கின்றன. அதன் விளைவாக தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிரான தனிமனித சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஷரத்துகள் இணைக்கப்படுகிறது. 


இந்திய நடுத்தர வர்க்கம் என்பது எப்போதுமே தொலைக்கட்சிகள் / செய்தித்தாள்களின் வழியாக மட்டுமே உலகை காணும் கிணற்றுத்தவளை கூட்டம். அந்த நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகள் Facebook/ Twitter பயன்படுத்துவதன் மூலம் "புதை மணல்" சேற்றில் விழுகிறார்கள் என்ற பிம்பத்தை கட்டமைக்க பெரும்பாடு படுகின்றன ஊடகங்கள்.

ஹிட்லரின் "எனது போராட்டம்" நூலில் ஊடகங்களின் பொய்மை தனத்தையும், ஒரு சிலரின் நலம் சார்ந்து அவர்கள் இயங்குவதையும் தம் இளமைக்கால பக்கங்களில் விளக்கமாக எழுதியிருப்பார். அந்த விளக்கங்களுக்கு சற்றும் குறைவற்று நடந்து கொள்கின்றன தற்கால ஊடகங்கள்.

தொடரும்...

(அடுத்த பதிவில் சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் அரசின் முயற்சிகளையும் "சமூக வலைதளங்களின் அத்துமீறிய செயல்பாடு" என சொல்லப்படும் "கட்டற்ற சுதந்திரம்" பற்றியும் பார்க்கலாம்.)

*All the images are taken from Net. Will be removed if requested.

1 comment:

  1. //* மக்களாட்சியின் நான்காம் தூணான இந்த "ஊடகங்கள்" தான் நாட்டை சீரழிப்பதில் இன்று முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அதில் தவறு இருக்க முடியாது. மக்களுக்கு என்ன மாதிரியான செய்தி சென்றடைய வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம் மக்களாட்சியின் குரல்வளையில் மிதிப்பதே இந்த நான்காம் தூண்தான். *//

    100% உண்மை

    Revolution Tools : படம் பட்டைய கெளப்புதுங்க..

    கடைசியா ஒரு சந்தேகம், என்னோட இந்த கருத்துக்கெல்லாம் கைது செய்ய மாட்டாங்க இல்ல..!!!!!????

    ReplyDelete