Monday, April 13, 2020

மனுஷா மனுஷா - நூல் மதிப்புரை

யாரிடமிருந்து வாங்கியது, படித்து முடித்தேனா இல்லையா என்று தெரியாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இந்த நூல். இப்போது படித்து போது சில கதைகளை முன்னமே படித்திருந்த நினைவு. எனினும் நூல்களை படிப்பதென்பதும், அது தரும் புரிதலும், அவை எழுப்பும் உணர்வும் காலம் சார்ந்தது தானே. பதின்மவயதில், இளமையில், மத்திமத்தில் என ஒவ்வொரு முறையும் புதிய புரிதல்களை, அனுபவங்களை தருபவை தானே கலைகள். நதி நீர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுவையுடன் இருப்பது போல.


1990ல் முதற்பதிப்பு கண்ட இந்த நூல், வண்ணதாசனால் 80களில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட 10 குறுங்கதைகள் கொண்ட நூலாகும். 70-80 களின் வாழ்க்கையை, அந்த மனிதர்களை மிக அழகாக படம் பிடிக்கிறது, 90களின் சிறுவனான எனக்கு இந்த கதைக்களம் மிகவும் நெருக்கமாக, இழந்து விட்ட ஏதோ ஒன்றை திரும்பப் பற்றியது போல, பள்ளிக்கூட நண்பனை கண்டது போல பசுமையாக இருக்கிறது. மில்லினியல்ஸ்களுக்கு இந்த கதைகள் fantasy ஆக இருக்குமா அல்லது நானடைகிற அதே உணர்வை அவர்களும் அடைவார்களா எனத் தெரியவில்லை.



குற்றவுணர்ச்சியை, மனத்தடையை, இயலாமையை, காலம் தப்பியும் நெஞ்சோடு நிறைந்திருக்குற காதலை அந்த அன்பை அப்படிச் சொல்லலாம் தானே, வெளிக்காட்டவியலாத கோபத்தை, பித்தேறிய பாசத்தை மிக இயல்பாக அதே வேளையில் வெகு அடர்வான சொற்கோர்வையாய் அசாத்தியமான உவமைகளோடு அளப்பரிய நுண்ணுர்வுடன் அகச்சிக்கல்களை அதற்கே உரிய அழகியலோட காட்சிப்படுத்துகிற இயல்பு வண்ணதாசனுக்கு வெகு இயல்பாய் அமைந்திருக்கிறது.


எங்கோ சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வுகளும், மறந்து போன அனுபவங்களும் தலைதூக்காமல் ஒரு கதையைக்கூட முடிக்க இயலவில்லை. நல்ல எழுத்து வாசகனுக்கு என்ன தர வேண்டும் என்பதற்கு பலர் பல விளக்கங்கள் தரலாம், என்னளவில் நல்ல எழுத்தென்பது வாசகனை எழுத்தாளனாக்க பிரயத்தனப்படும். இந்த குறுங்கதைகள் அதற்கு முயன்றிருக்கின்றன.