Saturday, April 25, 2020

முறிந்த பனை - நூல் மதிப்புரை

ஈழப்போர் முடிந்த சில ஆண்டுகளுக்கு பின் உணர்ச்சிக்குவியலாய் மனம் இருந்த காலகட்டத்தில் ஈழப்  போராட்டத்தை பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் 2011-12 வாக்கில் வாங்கப்பட்ட நூல் இது என்றாலும், விக்கிப்பீடியாவிலும் வெகுமக்கள் பத்திரிக்கைளிலும் கிடைத்த தகவல்களை தாண்டி ஆழமான தகவல்களை அறிந்து கொள்ள மனம் வராமல், அதற்கான உழைப்பைத் தர இயலாமல் வெகு காலமாக  படிக்கப்படாமல் கிடப்பிலேயே கிடந்தது இந்த நூல். மனித உரிமை மீதான தாக்கமும் அக்கறையும் அதிகமான போது இந்த நூலின் துணையில்லாமல் கூட இயக்கங்கள் செய்த தவறுகளை அறிந்துகொள்ள முடிந்ததும், இந்த நூலை இப்போது படிக்கும் போதும் உணர்வது ஒன்று தான். இந்த நூலை உணர்ச்சிப்பிழம்பாய் இருந்த அந்த நாட்களில் படித்திருக்க முடியாது எனவும், அப்படியே படித்து இருந்தாலும், இந்த ஆசிரியர்களின் உழைப்பை புறந்தள்ளியிருப்பேன் என்பதுமே. 

ஆங்கிலத்தில் "The Broken Palmyra, the Tamil Crisis in Sri Lanka, An Inside Account"  என்று 1990 ல் வெளிவந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பயணி வெளியீடாக “முறிந்த பனை - இலங்கை தமிழர் பிரச்சனை - உள்ளிருந்து ஒரு ஆய்வு” என்று 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. 

இந்த நூலை அ.மார்க்ஸ் இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார். 

"நீங்கள் கையில் ஏந்தியுள்ள இந்நூலின் ஆங்கில வடிவம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய விலைகொடுத்து வெளியிடப்பட்ட ஒரு நூல், ஒருவேளை நூலை வெளியிட்டதற்காக கொடுக்கப்பட்ட விலைகளில் உலகத்திலேயே மிக அதிகமான விலை கொடுக்கப்பட்ட நூலாகவும் கூட இது இருக்கலாம்" 

ஆம். இந்த நூலின் நான்கு ஆசிரியர்களில் ஒருவரான "ராஜினி திரானகம" இந்த நூலை வெளியிட்டதற்காக கொல்லப்படுகிறார். இந்நூலாசிரியர்கள்  யாவரும் வழமையாக நூல் எழுதுபவர்களோ அல்லது ஆராய்ச்சியாளர்களோ அல்ல, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராகள். தம் கண்முன்னே நிகழ்கின்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் நோக்கிலும், பொது நேர்மைக்கு தூரமாயிருக்கின்ற அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த நூலை வடித்திருக்கிறார்கள். 

இந்த நூல் 1948 - 1990 வரை, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்து கிளம்பும் வரை நிகழ்ந்த நிகழ்வுகளை, எந்த தத்துவத்தயும் சேராமல், எவர் பக்கமும் நின்று பேசாமல், உள்ளது உள்ளபடி, நிகழ்ந்த நிகழ்வுகளை, தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறது. இந்த நூலில் விவரிக்கப்படும் நிகழ்வுகள் யாவும் பத்திரிகை செய்திகளாக அக்காலங்களில் வெளிவந்தவை என்பது மட்டுமல்லாது, ஆசிரியர் குழு பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்டு, வெளியிடப்பட்ட  செய்திகளோடு பொருத்திப்பார்த்து உண்மை என்று உண்ர்ந்ததை பதிவு செய்து இருக்கின்றார்கள்.

சிங்கள மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு, அது எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாறி மாறி இருந்து இருக்கின்றது, இலங்கை தமிழ் கட்சிகள் எப்படி மலையக தமிழர்களை கைவிட்டார்கள், அது எப்படி ஒட்டுமொத்த தமிழினத்தின் தலையில் வந்து விழுந்தது, இலங்கை இடதுசாரி கட்சிகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் தமிழர் பிரச்சனையில் அவர்கள் பங்கும், தமிழர் கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களும், அரச பயங்கரவாதமும், பௌத்த பேரினவாதத்தின் எழுச்சியும் அதனால் பயன்பெற்றவர்கள், அழிந்தவர்கள், யாழ்ப்பாண பழ்கலைக்கழக மாணவர்களின் முன்னெடுப்புகள், அவை எப்படி ஆயுத போராட்டமாக உருக்கொண்டது, மக்களின் ஆதரவை அது எவ்வாறு பெற்றது, எப்போது மக்களின் ஆதரவை அவை இழந்தது, போராளிக்குழுக்களுக்கு இந்தியா அளித்த ஆதரவு, போராளிக்குழுக்களிடையே நிகழ்ந்த சகோதர யுத்தம் (இந்த நூலை படித்த பின் நிச்சயமாக அதை அவ்வாறு அழைக்க மாட்டீர்கள்), அதிகார வெறி கொண்ட ஒரு கொலைக்களமாக ஈழம் மாறிய காட்சிகளையும் பதிவு செய்கிறது. 

சிங்கள மக்களின் தமிழர் பற்றிய எண்ணங்கள், அதன் மீது தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஏற்படுத்திய தாக்கம், அதன் வன்முறைத் தன்மை, ஜெவிபி-யின் எழுச்சி, அதை ஒடுக்க அரசு கையாண்ட அடக்குமுறைகள் என பௌத்த-சிங்கள அரசியல் குறித்த அறிவு இல்லாமல் ஈழ-கேள்வியை நாம் புரிந்து கொள்ள முடியாது. இந்த நூல் அது பற்றி பல தகவல்களை அறியத்தருகிறது.

போராட்ட இயக்கங்களை மக்களிடம் நின்று கேள்வி கேட்ட கடைசி குரலாக பழ்கலைகழக மாணவர்கள் இருந்ததும், அவர்கள் எவ்வாறு மௌனிக்கப்பட்டார்கள் என்பதும் இந்த போராட்டத்தின் மீதான, களத்தில் இல்லாமல் இந்த போராட்டங்களை ஆதரித்த/ஆதரிக்கும் அனைவரின் பார்வையையும் இந்நூல் நிச்சியம் மாற்றும். 

மக்களின் வாழ்வுரிமை போராட்டமாக தொடங்கப்பட்ட இந்த ஆயுத போராட்டம் எப்படி ஆதிக்க வெறியாக மாறியது என்பதை முக்கிய பொறுப்பில் இருந்த போராளி ஒருவரின் அறைகூவலில் இருந்து உணரமுடிகிறது. அந்த அறைகூவல் கீழ்கண்டவாறு உள்ளது,

"35 லட்சம் தமிழ் மக்கள் இறந்தாலும் எமது தமிழீழ இலட்சியத்திலிருந்து நாம் மாற மாட்டோம்" என்றும் "இன்றைய தமிழ் மக்களின் சனத்தொகையில் ஒரு சிறுதொகையினரே தமிழீழ அரசுக்குப் போகும்”

என்பதாகும் அது. மக்களுக்கான போராட்டம் என்பதில் இருந்து தடம் மாறி, போராட்டத்தின் ஒரு அங்கமாக கூட மக்கள் மதிக்கப்படாமல் ஆணார்கள் என்பதை இதிலிருந்து உணரலாம்.

மற்ற போராளி இயக்கங்களை காட்டிலும் விடுதலை புலிகள் இயக்கம் எப்படி தத்துவார்த்த ரீதியாகவும், கட்டமைப்பிலும் தன்னை தக்கவைத்து கொண்டது என்பதற்கான காரணியை அறிய வரும்போது நெஞ்சில் கொண்டிருந்த பல பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாவதை மறுப்பதற்கில்லை. இறுதி ஈழப்போரில் இலங்கை ராணுவம், மக்கள் அதிகம் இறக்கும் போதெல்லாம், "விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள்" என்றும் "புலிகளே அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயலும் மக்களை சுடுகிறார்கள்" என்றும் சொன்னபோது அது ஒரு அருவெறுக்கத்தக்க பொய்யாகவே பட்டது. ஆனால் இறுதி ஈழபோருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே கூட அவர்கள் மக்களின் முதுகிற்கு பின்னால் நின்று கொண்டே தங்கள் போர்களை நடத்தியிருக்கிறாகள் என்பதை அறியும் பொழுது - எந்த ஒரு தரப்பையும் உணர்ச்சியின் வயப்பட்டோ, மனசார்பின் வயப்பட்டோ ஆதரிக்காமல் தரவுகளை தேடி அதன் வழி நமக்கான தளத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் வலுப்படுவதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நான் பெரிதும் மதித்த திலிபனின் உண்ணாவிரத மரணம் கூட ஒரு அரசியல் கணக்கே என்பதும், விடுதலைப்புலிகளின் தலைமை தங்களின் முன்முடிவான திட்டங்களுக்காகவும், பிடிவாதமான பொருளற்ற தேவைகளுக்காகவும் மக்களை மட்டுமல்ல, தம்மை ஒப்புக்கொடுத்த போராளிகளைக்கூட பலியிட தயங்கியதில்லை என்பதை அறிவதெல்லாம் பெரும் சோகம்.

இந்தியா அமைதிகாக்கும் படையின் குரூரம், அதன் திக்கற்ற, செயல்திட்டமற்ற, முழுக்க டெல்லியின் உத்தரவை நம்பி இருந்த பாங்கு மற்றும் ராணுவங்களுக்கே உரித்தான எதேச்சிகார போக்கு என அவை விளைவித்த நாசங்களும் அதன் வாயிலாக ஏற்பட்ட இழப்புகளையும் அறியும்போது அந்த மக்களை எண்ணி பரிதாபங்கொள்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. இந்திய படையின் அட்டூழியங்களை பற்றிய பக்கங்களை படிக்கும் போது மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாக வேண்டி வந்தது.

விடுதலை புலிகள், இந்திய அமைதி காக்கும் படை, இலங்கை ராணுவம் என ஒவ்வொருவரும் தாங்கள் ஆடும் சதுரங்கத்தில், மக்களை வெறும் பகடையாக மட்டுமே பார்த்திருக்கிறார்களே ஒழிய ஒரு போதும் அவர்களில் யாருமே "மக்களை" இந்த போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக, பயனாளிகளாக பார்க்கவில்லை என்பது வேதனை தரும் செய்தி மட்டுமல்ல, இந்த ஆயுத போராட்டத்தின் தோல்விக்கும் அதுவே முக்கிய காரணமுமாகும். உண்மையில் இந்த போராட்டம் விடுதலைப்புலிகளின் வெற்றியோடு முடிந்திருக்குமாயினும் கூட தனி நாடு என்பதை கடந்து ஒரு அடக்குமுறையில் இருந்து இன்னொரு அடக்குமுறைக்கு மக்கள் இடம் பெயர்ந்து இருப்பார்களே அன்றி வேறு எந்த நன்மையும் மக்களுக்கு விழைந்து இருக்கும் என தோன்றவில்லை. இந்த தெளிவு மிகவும் கசப்பான உண்மையாக முகத்தில் அறைகிறது.

ஈழ விடுதலைப் போரில், தமிழகத்தின் பங்கும், தமிழக அரசியல் கட்சிகளின் பங்கும், இந்த நூலில் எங்குமே எடுத்தாளப்படவில்லை என்பது ஒரு குறை. ஆனால் ஆசிரியர்களின் நோக்கும் எங்கு எவ்வாறு தவறு நடந்தது என்பதனை கண்டறியும் சுயபரிசோதனை முயற்சியாகையால் அதில் தமிழக பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றே கருதமுடிகிறது.

மொழிப்பெயர்ப்பு என்பதாலோ என்னவோ எழத்து நடை படிப்பதற்கு அத்தனை இயல்பாக இல்லை. அதே சமயம், உண்மைக்கு வெகு அருகில் நின்று உள்ளதை உள்ளபடி கூற வேண்டும் என்கின்ற ஆசிரியர்களின் உழைப்பு எழுத்து நடையின் சிரமங்களைத் தாண்டியும் நம்மை ஒன்றிப்போக வைக்கின்றது.

ஈழம் பற்றி அறிந்து கொள்ள முயலுவோரும், ஈழத்திற்க்கு வெளியே அமர்ந்து கொண்டு புரட்சியை ஏற்றுமதி செய்து ஈழம் பெற்றுத் தந்து விட வேண்டும் என்று கனவு கொண்டிருக்கும் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களும் பாலபாடமாக படிக்க வேண்டிய நூல் இதுவென்றால் மிகையாகாது.