Monday, April 13, 2020

லங்கா ராணி - நூல் மதிப்புரை

ஈழ விடுதலைப் போராட்டத்தின் திசைகளை காட்டும் பொருட்டு 1977-78 களில் அருளர் என்பவரால் எழுதப்பட்ட நூல். 1977 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பானத்திற்கு லங்கா ராணி என்ற கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த பயணத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

ஈழப்போராட்டம் இளைஞர்கள் முன்னெடுத்து நடக்க வேண்டும் என்றும் அது ஆயுதம் தாங்கிய புரட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்புரட்சி கம்யூனிச தத்துவத்தின் படியான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் திசையில் பயணிக்க வேண்டும் என்றும் இந்த நூல் கோடிட்டு காட்டுகிறது. இந்த நூலுக்கு பிறகான வரலாற்று நிகழ்வுகள் அவ்வாறே நிகழ்ந்தும் இருக்கின்றன. கெடுவாய்ப்பாக அந்த போராட்டம் வெற்றி பெறாமல் போனதும் வரலாறே.

இந்த நாவலில் கதைமாந்தர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலம், பழங்கால / மகாவம்ச கதைகளில் தொடங்கி, சமூக பொருளாதார அரசியல் வகையிலான என்னென்ன வேறுபாடுகள் தமிழ்-சிங்கள மக்களிடயே வேற்றுமையை ஊற்றி வளர்த்தனவென்றும், அந்த வேறுபாடுகள் கதை நடக்கும் காலத்தில் முற்றி வளர்ந்து எப்படி சரி செய்ய முடியாத நிலைக்கு சென்று விட்டதென்றும் விளக்குகிறது இந்நூல்.

முதலாளித்துவ ஆட்சி முறையின் எதிர்மறை பக்கத்தையும் கம்யூனிசத்தின் நேர்மறை பக்கத்தையும் மட்டும் காட்டி, ஈழம் நிகழும் போது அதனுள் எழப்போகும் பிரச்சனைகளுக்கு கம்யூனிசமே தீர்வு என இந்நூல் நிறுவ முற்பட்டு இருப்பது ஆசிரியரின் அரசியல் சார்பு நிலையை காட்டுகிறது.

இப்போது ஈழம் கனவாகிப்போன சூழலில், ஈழத்தை ஆயுத போரட்டங்கிளில் இருந்து மட்டுமே அறிந்திருக்கும், குறிப்பாக அயுத போராட்டத்தின் கவர்ச்சியை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் தற்கால தமிழக மற்றும் புலம்பெயர் இளைஞர்களுக்கு இந்த நூலில் அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது.